காஞ்சீபுரம் அருகே புதிய பஸ்நிலையம் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் நகராட்சி ஆணையர் தகவல்
காஞ்சீபுரம் அருகே ரூ.38 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் உருவாக உள்ளது. இதற்காக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்று நகராட்சி ஆணையர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது;-
காஞ்சீபுரம் பஸ் நிலையம் கட்டப்பட்டு 47 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 50 பஸ்களை கொண்ட முதல் நிலை பஸ் நிலையம் ஆகும். தற்போது உள்ள பஸ்நிலைய அமைவிடம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அணுகு சாலைகள் இந்த நகருக்கு நாள்தோறும் வந்து செல்லும் பயணிகளின் பயணத்திற்கு போதுமானதாக இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் 2,560 முறை வந்து செல்கிறது. காஞ்சீபுரம் நகரம் கோவில்கள் நிறைந்த புனித நகரம். பட்டுக்கு புகழ்பெற்றது என்பதால் நாள்தோறும் இந்த நகருக்கு வெளியூர் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே தற்போது உள்ள பஸ் நிலையம் நாள்தோறும் பயணம் செய்யும் மக்கள் கணக்கு அடிப்படையில் போதுமானதல்ல நகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் சரியான இடத்தில் அமைப்பதற்கு திட்ட வரைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய பஸ் நிலையம்
இதையடுத்து காஞ்சீபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் 42 சென்ட் நிலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க காஞ்சீபுரம் நகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதையொட்டி புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு இடமும் நகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காஞ்சீபுரம் நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் ரூ.38 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்த திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகளை தெரிவிக்கலாம்
இந்தநிலையில் கீழ்கதிர்பூர் என்ற இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணியை தொடங்க பொதுமக்களிடம் இருந்து ஆலோசனை மற்றும் ஆட்சேபனைகளை பெறுமாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி புதிய பஸ் நிலையம் கட்டுமானத்திற்கான நிதிஒதுக்கீடு, கையகப்படுத்த வேண்டிய நிலம், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அமைவது தொடர்பான அறிவிப்பு ஆணை நகராட்சி இணையதளத்தில் ka-n-c-h-e-e-pu-r-am@m.gov.in வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனை தெரிவித்த பிறகு புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story