திருப்பூர் மாணவிக்கு தவறான சிகிச்சை பொள்ளாச்சி வைத்தியர் மீது போலீசார் வழக்குப்பதிவு


திருப்பூர் மாணவிக்கு தவறான சிகிச்சை பொள்ளாச்சி வைத்தியர் மீது போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 1 Nov 2019 4:00 AM IST (Updated: 1 Nov 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நோயால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக பொள்ளாச்சி வைத்தியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அனுப்பர்பாளையம், 

திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த நூல் கடை உரிமையாளரின் 13 வயது மகள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு தோலில் அலர்ஜி ஏற்பட்டு உடலில் கட்டிகள் வந்துள்ளது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் மகேந்திரன் என்ற பரம்பரை வைத்தியர் இருப்பதாக மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் வீட்டிற்கு வந்து சிகிச்சை அளிக்குமாறு வைத்தியர் மகேந்திரனை மாணவியின் பெற்றோர் அழைத்துள்ளனர். இதனால் மகேந்திரன் மாணவியின் வீட்டிற்கு சென்று சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் அந்த சிகிச்சையின் மூலம் மாணவிக்கு தோல்நோய் குணமாகவில்லை. மாறாக மாணவியின் தோல், மேலும் பாதிப்பு அடைந்ததாகவும், அதிக வலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவளை தோல் டாக்டரிடம் அழைத்து சென்று காட்டி உள்ளனர். அப்போது மாணவியின் தோல் நிறம் மாறி விட்டதாகவும், அதை குணமாக்க முடியாது என்றும் டாக்டர் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் வைத்தியர் மகேந்திரன் மீது, 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில் மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வைத்தியர் மகேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story