மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அருகே, மழையால் இடிந்து விழுந்த வீடு - தம்பதி உயிர் தப்பினர் + "||" + Near Dindigul, House collapsed due to rain - The couple survived

திண்டுக்கல் அருகே, மழையால் இடிந்து விழுந்த வீடு - தம்பதி உயிர் தப்பினர்

திண்டுக்கல் அருகே, மழையால் இடிந்து விழுந்த வீடு  - தம்பதி உயிர் தப்பினர்
திண்டுக்கல் அருகே மழையால் வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் வசித்த தம்பதி உயிர் தப்பினர்.
திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள பள்ளப்பட்டி ஊராட்சி கொட்டப்பட்டி பகுதியில் அரசு சார்பில் ஏராளமான தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வீட்டில் கூலித்தொழிலாளியான சிவா (வயது 28), அவருடைய மனைவி மகாலட்சுமி ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது காற்றின் வேகமும் அதிகமாக இருந்தது. மேலும் அதிகாலை 3 மணி வரை மழை நீடித்தது. வீட்டில் தம்பதியினர் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை உடையும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த சிவா, மேற்கூரை இடிந்து வீட்டுக்குள் விழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே தூங்கிக்கொண்டிருந்த தனது மனைவியை எழுப்பினார். பின்னர் இருவரும் லேசான காயங்களுடன் வீட்டைவிட்டு வெளியேறினர். இதற்கிடையே வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. வீடு முழுமையாக இடிந்து விழுவதற்குள் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக தம்பதியினர் உயிர் தப்பினர்.

இதே போல், திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக பழனி பைபாஸ் சாலையில், பழனி ரோடும் மேம்பாலமும் இணையும் சந்திப்பில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதேபோல் நகரின் முக்கிய சாலைகள் மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளன.