மின்னல் தாக்கி தொழிலாளி பலி, மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி


மின்னல் தாக்கி தொழிலாளி பலி, மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 1 Nov 2019 3:15 AM IST (Updated: 1 Nov 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

மின்னல் தாக்கி தொழிலாளி பலியானார். மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

பிரம்மதேசம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள எண்டியூரைச்சேர்ந்தவர் தனசேகர் (வயது47). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று மதியம் அங்குள்ள ஓடையில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. மின்னல் தாக்கியதில் தனசேகர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார்.

இது பற்றிய தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மின்னல் தாக்கி பலியான தனசேகருக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இதேபோல் விக்கிரவாண்டியை அடுத்த குத்தம் பூண்டி கிராமத்தைச்சேர்ந்த தினேஷ் என்பவரின் மனைவி ரேவதியும் (23). அதே ஊரைச்சேர்ந்த அய்யனார் என்பவரின் மனைவி நாகம்மாளும்(56) நேற்று குத்தம்பூண்டி ஏரிப்பகுதியில் மாடுகளை மேய்த்துகொண்டிருந்தனர். அப்போது மதியம் 2.30 மணி அளவில் திடீரென இடி- மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது, அதனால் இருவரும் ஏரிக்கரையில் இருந்த புளிய மரத்தின் கீழ் ஒதுங்கினார்கள். அப்போது திடீரென புளியமரத்தில் மின்னல் தாக்கியது. இதில் ரேவதியும், நாகம்மாளும் அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை சிகிச்சைக்காக விக்கிரவாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே பெரியதச்சூர் அருகே உள்ள விநாயகபுரத்தில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த பிரகாஷ் மனைவி கலா(25) என்பவரும் மின்னல் தாக்கி காயம் அடைந்தார். அவரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Next Story