ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் கவர்னருடன், ஆதித்ய தாக்கரே திடீர் சந்திப்பு


ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் கவர்னருடன், ஆதித்ய தாக்கரே திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 31 Oct 2019 11:15 PM GMT (Updated: 2019-11-01T01:39:52+05:30)

ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை, ஆதித்ய தாக்கரே திடீரென சந்தித்து பேசினார்.

மும்பை, 

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் கூட்டணி கட்சியான பாரதீயஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.

இரு கட்சிகளுக்கும் சேர்த்து மெஜாரிட்டி கிடைத்தபோதும் சிவசேனா முதல்-மந்திரி பதவியிலும், ஆட்சி அதிகாரத்திலும் சமபங்கு கேட்பதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்தநிலையில், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பை தாதரில் உள்ள சிவசேனா பவனில் நேற்று நடந்தது. இதில் சட்டசபை சிவசேனா தலைவராக பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டசபை சிவசேனா தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட கையுடன் கட்சியின் இளைஞர் அணி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஆதித்ய தாக்கரே மற்றும் முக்கிய தலைவர்கள் மும்பை ராஜ்பவனுக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினர்.

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்துவரும் பரபரப்பான சூழ்நிலையில் சிவசேனா தலைவர்கள் கவர்னரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சந்திப்பின்போது, மராட்டியத்தில் தொடர்ந்து பெய்துவரும் பருவம் தவறிய மழையால் பயிர்சேதத்தை சந்தித்துள்ள விவசாயிகள் மற்றும் வாழ்வாதாரம் இழந்துள்ள மீனவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். மேலும் அது குறித்த மனுவையும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் வழங்கியதாக அக்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

Next Story