7-வது நாளாக வேலை நிறுத்தம்: 95 அரசு டாக்டர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு


7-வது நாளாக வேலை நிறுத்தம்: 95 அரசு டாக்டர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு
x
தினத்தந்தி 1 Nov 2019 4:30 AM IST (Updated: 1 Nov 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 7-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 95 அரசு டாக்டர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டது.

விழுப்புரம், 

சம்பள உயர்வு உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் கடந்த 25-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் அரசு டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது.

இதனால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, மேல்மலையனூர், திருக்கோவிலூர், திண்டிவனம், சின்னசேலம், சங்கராபுரம், மரக்காணம், வானூர் ஆகிய தாலுகா அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் டாக்டர்களில் பலர் நேற்று பணிக்கு வரவில்லை.

எனினும் அரசு மருத்துவமனைகளுக்கு வந்த புற நோயாளிகளுக்கு தலைமை டாக்டர்கள், மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் விழுப்புரம் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்சுந்தர் தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி ஆகிய அரசு மருத்துவமனைகள் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் கூறுகையில், எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால் இன்று (அதாவது நேற்று) 7-வது நாளாக போராட்டம் தொடருகிறது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 235 டாக்டர்களில் 200 பேரும், தாலுகா அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 198 டாக்டர்களில் 170 பேரும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் 220 டாக்டர்களில் 100 பேரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

எங்களின் வேலை நிறுத்தம் காரணமாக புறநோயாளிகள் பிரிவு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பொது அறுவை சிகிச்சையும், நரம்பியல் தொடர்பான அறுவை சிகிச்சையும் தடைபட்டுள்ளது. அதேநேரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வருகிறோம். அதுபோல் அவசர அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறோம். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

இதற்கிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 95 டாக்டர்களிடம் விளக்கம் கேட்டும், உடனடியாக பணிக்கு திரும்பும்படியும் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

Next Story