மாவட்டம் முழுவதும் சேதமடைந்த உலர்களங்களை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை


மாவட்டம் முழுவதும் சேதமடைந்த உலர்களங்களை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Nov 2019 4:30 AM IST (Updated: 1 Nov 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள உலர்களங்களை சீரமைத்து தரவேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளும், அதற்கு அதிகாரிகள் அளித்த பதில்களும் வருமாறு:-

ராஜேந்திரன்:- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் சுமார் 20 ஆயிரம் தென்னை மரங்கள் பட்டுபோனது. தற்போதுள்ள மரங்களும் இன்னும் 3 ஆண்டுகளுக்கு பலன்அளிக்க முடியாத நிலையில் உள்ளன. எனவே தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.

கலெக்டர்:- உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

கடன் உதவி

பாலசுப்பிரமணியம்:- நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக பயிர்கடனாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. ஆனால் சில பகுதிகளில் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மட்டுமே தரமுடியும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். எனவே சீரான முறையில் கடன்உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் சில ஓட்டல் களில் உடைந்த முட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல் தள்ளுவண்டிகளில் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகிறார்கள். கிராமபுறங்களில் போலி டீத்தூள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கலெக்டர்:- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உலர்களங்கள்

சந்திரசேகரன்:- கல்குறிச்சி ஊராட்சியில் மக்காச்சோளம் பயிர்செய்த விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். ஆனால் படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. அது கிடைக்கவும், நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளவும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கலெக்டர்:- குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும். காப்பீட்டு தொகையும் கிடைக்க நடவடிக்கை எடுக்கலாம்.

பூபாலன்:- நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சி பகுதிகளில் உலர்களங்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் தானியங்களை உலரவைக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே சேதமடைந்த உலர்களங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கொல்லிமலையில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகவும் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். எனவே கொல்லிமலை வட்டாரத்தில் மட்டும் ரசாயன உரங்களை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும்.

கலெக்டர்:- சேதமடைந்த உலர்களங்கள் குறித்த தகவலை விவசாயிகள் கொடுத்தால், அவை முன்னுரிமை அடிப்படையில் சீரமைத்து தரப்படும். ரசாயன உரங்களை தடைசெய்வது தொடர்பான அங்குள்ள மக்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம்.

ஆக்கிரமிப்பு

சுந்தரம்:- கொல்லிமலையில் இருந்து வரும் மழைநீர் வரட்டாறு வழியாக புதுக்குளம் ஏரியை நிரப்பும். ஆனால் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பெரும்பாலான விவசாயிகள் பேசும்போது மயில் தொல்லை அதிகரித்து இருப்பதாகவும், வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார்.

இதில் இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டை குமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயலட்சுமி உள்பட அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story