மீனவர்கள் மோதல் விவகாரம்: புதுச்சேரி, நல்லவாடு மீனவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட விவகாரம் குறித்து புதுச்சேரி-நல்லவாடு மீனவர்களுக்கு கலெக்டர் அருண் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களும், தமிழக பகுதியான நல்லவாடு கிராம மீனவர்களும் மீன்பிடிப்பது தொடர்பாக அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.
ஏற்கனவே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எச்சரிக்கை விடுத்ததையும் மீறி அவர்கள் மோதலில் ஈடுபட முயன்றனர். இதனால் வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினார்கள்.
இதுதொடர்பாக இரு கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் தனித்தனியாக புகார் தெரிவித்ததன் பேரில் 1000க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் மீனவர்கள் 40 பேர் 2 மாத காலம் ஊருக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது..
இந்தநிலையில் புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண் தலைமையில் வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் சப்-கலெக்டர் சுதாகர், மீன்வளத்துறை இயக்குனர் முனுசாமி, சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், மோகன்குமார், ரங்கநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இரு கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மீனவர்கள் தங்களது பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதையடுத்து கலெக்டர் அருண் பேசுகையில், புதுவை அமைதியான மாநிலம். இருமாநில மீனவர்கள் மோதல் காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. மீனவர்கள் இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகளில் மற்றும் தகராறில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது.
இந்த எச்சரிக்கையை மீறி நடந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுருக்கு வலை விவகாரம் தொடர்பாக புதுவை மாநில மீனவர்கள் புதுச்சேரி அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றார்.
மேலும் இந்த கூட்டத்தில், புதுச்சேரி மாநில மீனவர்கள் கலெக்டரிடம் , தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையின் போது ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். துறைமுகத்தை சுற்றி 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டுமென கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு பதில் அளித்த கலெக்டர், இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
Related Tags :
Next Story