நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு


நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 3:30 AM IST (Updated: 1 Nov 2019 9:56 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதுதவிர பஸ் நிலையத்திற்குள் சிலர் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுபோன்ற ஆக்கிரமிப்பு காரணமாக பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டது. எனவே பஸ் நிலையத்திற்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகளின் உத்தரவுப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்டோரா மூலம் அரசு அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு, கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.

இதனைத்தொடர்ந்து நிலக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் 1-ந்தேதி அகற்றப்படும் என்று 2 தினங்களுக்கு முன்பு அறிவிப்பு செய்தது. அதன்படி நேற்று காலை சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நிலக்கோட்டை பேரூராட்சி ஊழியர்கள், பொக்லைன் எந்திரங்கள் உதவியோடு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர்.

அப்போது அங்கிருந்த வியாபாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள கால அவகாசம் கேட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன், தாசில்தார் யூஜின், பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் தரப்பில், ஏற்கனவே பலமுறை அறிவிப்பு செய்தும் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளவில்லை. எனவே கண்டிப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது வியாபாரிகள் தரப்பில், ஆக்கிரமிப்புகளை அகற்ற மேலும் 5 நாட்கள் கால அவகாசம் கொடுக்கும்படி கேட்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் ஆலோசனை செய்து கட்டிடங்களாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள 2 நாட்கள் கால அவகாசம் வழங்கினர். மேலும் கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த தகர கூரைகளை அகற்ற வேண்டும் என்றனர். அதன்படி வியாபாரிகள் அவற்றை தாங்களாகவே அகற்றிக்கொண்டனர். 

Next Story