வேலூர் மத்திய சிறையில் நளினி-முருகன் உண்ணாவிரதம் நீடிப்பு - அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுப்பு


வேலூர் மத்திய சிறையில் நளினி-முருகன் உண்ணாவிரதம் நீடிப்பு - அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுப்பு
x
தினத்தந்தி 1 Nov 2019 10:30 PM GMT (Updated: 1 Nov 2019 4:59 PM GMT)

வேலூர் மத்தியசிறையில் நளினி- முருகன் உண்ணாவிரதம் நீடித்து வருகிறது. அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டனர்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர். கடந்தசில நாட்களுக்கு முன்பு முருகன் அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு செல்போன், 2 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டது.

இதனால் முருகனுக்கு சிறையில் வழங்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் ரத்துசெய்யப்பட்டது. நளினி- முருகன் சந்திப்புக்கும் தடைவிதிக்கப்பட்டது. மேலும் முருகன் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதனை கண்டித்து முருகன் சாப்பிடமறுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். முருகனை தனிமை சிறையில் இருந்து வழக்கமான அறைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் முருகனை நேற்றுமுன்தினம் போலீசார் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வெளியே வந்த முருகன் தன்னை தனிமைசிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாகவும், பரோல், விடுதலையை தடுக்க திட்டமிட்டு சதி நடப்பதாகவும், அதனால் சாப்பிடமறுத்து உண்ணாவிரதம் இருப்பதாகவும் கூறினார்.

முருகனின் உண்ணாவிரதம் நேற்று 15-வது நாளாகவும், நளினியின் உண்ணாவிரதம் 7-வது நாளாகவும் நீடித்தது. பெண்கள் சிறையில் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு நளினியிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்று நளினி கூறிவிட்டார். தொடர்ந்து முருகனிடமும், நளினியிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

தொடர் உண்ணாவிரதம் காரணமாக நளினி, முருகனின் உடல்நிலையை சிறை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

Next Story