சென்னையில், குடிநீர் வாரிய பெண் என்ஜினீயர் கைது


சென்னையில், குடிநீர் வாரிய பெண் என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2019 11:00 PM GMT (Updated: 1 Nov 2019 6:32 PM GMT)

சென்னையில் குடிநீர் வாரிய பெண் என்ஜினீயர் கைது. ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கினார்.

சென்னை,

சென்னை சிந்தாதிரிபேட்டையில் குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கண்காணிப்பு என்ஜினீயராக பணியாற்றுபவர் விஜயகுமாரி (வயது 54). இவர் புதிதாக குடிநீர் இணைப்பு கேட்பவர்களிடம் ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அந்தவகையில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு புதிய குடிநீர் இணைப்பு கொடுக்க என்ஜினீயர் விஜயகுமாரி ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு குமரகுரு, விஜயகுமாரியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டார்.

இந்தநிலையில் நேற்று மாலையில் என்ஜினீயர் விஜயகுமாரி தனது அலுவலகத்தில் வைத்து சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் லஞ்ச பணத்தை வாங்கினார். அப்போது அங்கே மாறு வேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக விஜயகுமாரியை பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த அவர்கள் விஜயகுமாரியிடம் இருந்து ரூ.50 ஆயிரம் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரது அலுவலகத்திலும், வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

Next Story