லாலாபேட்டை அருகே, மகிளிப்பட்டி பாலம் இடிந்து விழுந்தது - போக்குவரத்து மாற்றம்
லாலாபேட்டை அருகே மகிளிப்பட்டி பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
லாலாபேட்டை,
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் தமிழகத்தில் அணை, ஏரி, குளங்களில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகின்றது. காவிரி ஆற்றில் இருந்து கட்டளை மேட்டுவாய்க்கால் வழியாக பாசனத்திற்காக செல்லும் தண்ணீர் திருச்சி கல்லணையில் கலக்கிறது. கிராமப்புற பகுதிகளுக்கு பாசனத்திற்காக காவிரிநீரை கொண்டு செல்வதற்காக ஆங்காங்கே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதேபோல லாலாபேட்டை அருகே மகிளிப்பட்டி என்ற இடத்தில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் வழியாக நேற்று முன்தினம் இரவு கனரக வாகனம் ஒன்று சென்றது. அப்போது பாரம் தாங்காமல் பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை கிருஷ்ணராயபுரம் தாசில்தார் ரத்தினவேலுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தாசில்தார் ரத்தினவேல் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் மாயனூர் பொதுப்பணித்துறை பொறியாளர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என தாசில்தார் உத்தரவிட்டார்.
இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மற்றொரு பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் பள்ளி, கல்லூரி சென்ற மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story