நெய்வேலி அருகே பயங்கரம்: சுவரில் அடித்து குழந்தை படுகொலை - பெண் உள்பட 3 பேர் கைது


நெய்வேலி அருகே பயங்கரம்: சுவரில் அடித்து குழந்தை படுகொலை - பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2019 10:15 PM GMT (Updated: 1 Nov 2019 9:15 PM GMT)

நெய்வேலி அருகே குழந்தையை சுவரில் அடித்து படுகொலை செய்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெய்வேலி, 

விழுப்புரம் மாவட்டம் கள்ளமேடு கிராமத்தை சேர்ந்தவர் உத்தண்டி. இவரது மனைவி ராஜேஷ்வரி (வயது 32). இவர்களுக்கு அம்சவல்லி(7), மீனா(5), கனகவள்ளி(3) என்ற 3 குழந்தைகள் இருந்தனர்.

இவர்கள் குடும்பத்துடன் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மேலக்குப்பம் ரோட்டு தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி கமலம்(59) என்பவரது வீட்டில் தங்கி, விவசாய வேலை செய்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் இவர்களை வெளியே எங்கும் அனுப்பாமல், கொத்தடிமை போன்று கமலம் நடத்தி வந்துள்ளார்.

கடந்த 26-ந்தேதி மாலையில் கமலம் தனது வீட்டு மாடியில் மணிலாவை(நிலக்கடலை) காய வைத்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சென்ற குழந்தை மீனா, மணிலாவை மிதித்ததாக தெரிகிறது. இதை பார்த்து ஆத்திரமடைந்த கமலம், அந்த குழந்தையின் தலைமுடியை பிடித்து இழுத்து, மாடி சுவரின் மீது மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள்.

இதையடுத்து கமலம் கொலையை மறைப்பதற்காக தனது மகன் அருள்முருகன், மகள் அஞ்சலை(34) மற்றும் அஞ்சலைக்கு தெரிந்த நபரான கீழ்பாதியை சேர்ந்த அய்யப்பன்(31) ஆகியோருடன் விருத்தாசலம் அருகே முதனையில் உள்ள முந்திரிதோப்புக்கு தனது காரில் மீனாவின் உடலை எடுத்து சென்றனர். பின்னர் அங்கு குழந்தையின் உடலை புதைத்துவிட்டு எதுவும் நடக்காதது போன்று வீட்டுக்கு வந்துவிட்டனர்.

குழந்தை காணாதது பற்றி அறிந்த ராஜேஷ்வரி குழந்தையை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். இருப்பினும் கமலம் அவரை வெளியே எங்கும் சென்று தேடவிடாமல் தடுத்து, வீட்டுக்குள்ளேயே வைத்து சித்ரவதை செய்துவந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை தனது குழந்தை கொலையான அதிர்ச்சி தகவல் ராஜேஷ்வரிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது மற்ற 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து தப்பி, தெர்மல் போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் மேலக்குப்பத்துக்கு விரைந்து சென்று கமலத்தை மடக்கி பிடித்தனர்.

கொலையை ஒப்புக்கொண்டதால் அவரை முதனைக்கு அழைத்து சென்ற போலீசார், அங்கு முந்திரிதோப்பில் புதைக்கப்பட்டு இருந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்பு குழந்தையின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கமலம், அஞ்சலை, அய்யப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அருள்முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கமலத்தின் வீட்டில் இருந்த குழந்தையின் தந்தை உத்தண்டியை காணவில்லை. அவர் எங்கு சென்றார்? அவருக்கு என்ன நேர்ந்தது? என்பதும் தெரியவில்லை. இதனால் அவரை தேடும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் உத்தண்டிக்கும் கமலத்தின் தரப்பினரால் ஏதேனும் கொடூரம் நடந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. எனவே இது தொடர்பாகவும் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story