திருச்சி அருகே, போதை வாலிபர்கள் தாக்கியதால், கொள்ளிடம் ஆற்றில் குதித்த என்ஜினீயரிங் மாணவர் பிணமாக மீட்பு


திருச்சி அருகே, போதை வாலிபர்கள் தாக்கியதால், கொள்ளிடம் ஆற்றில் குதித்த என்ஜினீயரிங் மாணவர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 4:30 AM IST (Updated: 2 Nov 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே மது போதையில் இருந்த வாலிபர்கள் தாக்கியதால், கொள்ளிடம் ஆற்றில் குதித்த என்ஜினீயரிங் மாணவர் பிணமாக மீட்கப்பட்டார். ஆனால் அவர் ஆற்றில் தூக்கிவீசப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.

திருச்சி,

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் ஜீவித்குமார்(வயது 20). இவர் திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி படித்த அவர், துறையூரில் உள்ள அவருடைய அத்தை வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்தார்.

அப்போது அவருக்கும், அவரது உறவினரான இளம்பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. அந்த பெண் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் காதல்ஜோடியான 2 பேரும் கடந்த 30-ந் தேதி திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலத்திற்கு கீழ் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் தனிமையில் பேசிக்கொண்டிருந்ததை, லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி மாங்காடு பகுதியை சேர்ந்த சேகரின் மகன் கோகுல்(23), மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தேவிமங்கலம் பகுதியை சேர்ந்த ராமரின் மகன் கலையரசன்(22) ஆகியோர் கவனித்தனர். மதுபோதையில் இருந்த அவர்கள் 2 பேரும், காதல் ஜோடியை தங்களது செல்போனில் ரகசியமாக படம் பிடித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு சென்ற அவர்கள், காதல் ஜோடியிடம் ‘நீங்கள் இங்கு தனிமையில் என்ன செய்கிறீர்கள்?‘ என்று கேட்டு, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததுடன், அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அதை தட்டிக்கேட்ட ஜீவித்குமாரை, அவர்கள் 2 பேரும் தாக்கினர்.

இதைத்தொடர்ந்து ஜீவித்குமார், தனது காதலியை அங்கிருந்து சென்றுவிடுமாறு கூறியுள்ளார். இதனால் அந்த பெண் அங்கிருந்து ஓடிவிட்டார். இதையடுத்து அந்த வாலிபர்கள், ஜீவித்குமாரை சரமாரியாக தாக்கியதை தொடர்ந்து, அவர் கொள்ளிடம் ஆற்றில் குதித்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த சிலர், 2 வாலிபர்களையும் பிடித்து கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல், கலையரசன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் ஆற்றில் குதித்த ஜீவித்குமாரை மீட்பதற்காக, ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் ரப்பர் படகு மூலம் கொள்ளிடம் ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. 2-வது நாளாக நேற்று முன்தினம் தேடுதல் பணி நடைபெற்றது. இதில் பொன்னுரங்கபுரம் அருகில் கொள்ளிடம் ஆற்றங்கரையோரத்தில் ஜீவித்குமாரின் பை மட்டும் கிடைத்தது. ஆனால் அன்று இரவு வரை தேடியும் ஜீவித்குமார் கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து 3-வது நாளாக நேற்று காலை தேடுதல் பணியில் திருச்சி, நவல்பட்டு, ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் கொள்ளிடம் ஆற்றில் வெவ்வேறு இடங்களில் ரப்பர் படகில் சென்று, தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது உத்தமர்சீலி அருகே உள்ள திருப்பால்துறை என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஜீவித்குமார் பிணமாக மிதந்தார். இதைக்கண்ட மீட்பு குழுவினர் ஜீவித்குமாரின் உடலை கயிறு கட்டி மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜீவித்குமாரின் தந்தை, அண்ணன் செல்வகுமார் உள்பட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு வந்து ஜீவித்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதது, அதை பார்த்தவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்க செய்வதாக இருந்தது. அப்போது ஜீவித்குமாரின் உறவினரான பெண் ஒருவர், துக்கம் தாங்காமல் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர் கண் விழித்தார். இதற்கிடையே ஜீவித்குமார் உடல் மீட்கப்பட்ட தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜீவித்குமாரின் தந்தை செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஜீவித்குமாரின் அண்ணன் செல்வகுமார் கூறுகையில், ‘எனது தம்பி, அவனது காதலியுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது 2 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டதை தொடர்ந்து, அவர் கொள்ளிடம் ஆற்றில் குதித்ததாக, போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் நான் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது, 5 பேர் கொண்ட போதை கும்பல் எனது தம்பியை கடுமையாக தாக்கி, ஆற்றில் தூக்கி வீசியதாகவும், இதனால் அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார் என்றும் கூறினர். இந்த சம்பவத்தில் 2 பேரை மட்டும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், மற்ற 3 பேர் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மேலும் பிணமாக மீட்கப்பட்ட எனது தம்பியின் கை, தலை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருக்கின்றன. இதனால் அவரை வாலிபர்கள் தாக்கி தண்ணீரில் தூக்கிவீசி கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்‘ என்றார்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், ஜீவித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர்தான், அவர் கொலை செய்யப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டாரா?, அல்லது அவரே தண்ணீரில் குதித்து உயிரிழந்தாரா? என்பது தெரியவரும், என்று தெரிவித்தனர்.

Next Story