வண்டலூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி - செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி போராட்டம்
வண்டலூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி போராட்டத்தில் ஈடுபட்டார்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள வண்டலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன். இவருடைய மகன் திலகர் (வயது 30). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை 6 மணியளவில் வண்டலூர் கிராமத்தில் சாலை, குடிநீர், கழிவறை மற்றும் மயானத்திற்கு செல்லும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாகவும், உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் அந்த பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் தாசில்தார் கபிலன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்திய கீர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை கண்ணன், வேளாங் கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து திலகரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமார் 12 மணியளவில் திலகர் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தார். பின்னர் போலீசார் அவரை விசாரணைக்காக வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். வண்டலூர் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று தொழிலாளி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சம்பவத்தில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து இதேபோல திலகர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story