போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தவர்களை, காரில் வந்து ஓட ஓட விரட்டி வெட்டிய மர்ம நபர்கள்


போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தவர்களை, காரில் வந்து ஓட ஓட விரட்டி வெட்டிய மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 1 Nov 2019 9:45 PM GMT (Updated: 1 Nov 2019 8:48 PM GMT)

போலீஸ்நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தவர்களை, காரில் வந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டி சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மானாமதுரை, 

மானாமதுரையை அடுத்த கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். அதே ஊரே சேர்ந்தவர் முத்துப்பாண்டி இவர்களுக்குள் ஏற்கனவே முன்பகை காரணமாக மோதல் ஏற்பட்டதால், இருதரப்பினரும் அடிக்கடி மோதிக்கொண்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி இருதரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சிப்காட் போலீஸ்நிலையத்தில் புகார் செய்ததின் பேரில் இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற முத்துப்பாண்டி, ராஜாராம், முத்துராஜா ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் சிப்காட் போலீஸ்நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தனர். அவர்கள் சிவகங்கை-மானாமதுரை ரோட்டில் வந்த போது, ஒரு காரில் பின் தொடர்ந்த மர்ம நபர்கள், 3 பேர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.

அதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் விழுந்ததில், காரில் வந்த மர்ம நபர்கள் 3 பேரையும் அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது 3 பேரும் தப்பி ஓடினர். அவர்களை ஓட ஓட விரட்டிய மர்ம நபர்கள் முத்துப்பாண்டி, ராஜாராம் ஆகியோரை உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதில் முத்துராஜா மட்டும் தப்பி ஓடிவிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான போலீசார் பலத்த காயமடைந்து கிடந்த முத்துப்பாண்டி, ராஜாராம் ஆகியோரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்பகை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story