வீடியோ காட்சி அடிப்படையில், தேவர் குருபூஜை விழாவில் விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு
தேவர் குருபூஜை விழாவின் போது விதிகளை மீறியவர்கள் மீது வீடியோகாட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா கடந்த 28-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற்றது. அரசு விழாவான இந்த விழாவையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதவிர நிகழ்ச்சியின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த விதிமுறைகளை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த சிலர் கடைபிடிக்காமல் மீறி செயல்பட்டனர். ஒருசிலர் விழாவிற்கு வந்த நோக்கத்தை மறந்து போலீசாருக்கு மிகவும் சவால் விடுக்கும் வகையிலான செயல்களில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வாகனங்களின் மேற்கூரையில் வந்தவர்கள் குறைவு என்றாலும் 2 சக்கர வாகனங்களில் அதிகஅளவில் விதிகளை மீறி வந்தனர். மற்ற மாவட்டத்தினரை விட ராமநாதபுரம் மாவட்டத்தினர் தான் இதுபோன்ற விதிமீறல்களில் அதிகம் ஈடுபட்டு பல குற்றச்செயல்களை செய்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த இளைஞர்கள் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ் சூப்பிரண்டின் வாகனத்தின் மீது அதிக ஒலி எழுப்பும் பட்டாசு வெடியை வீசினர். இதில் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. மற்றொரு கும்பல் வீசிய பட்டாசு வெடி யினால் அரசு பஸ் கண்ணாடி உடைந்தது.
சில இளைஞர்கள் போலீசாரின் முன்பு அத்துமீறல் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். விழா அமைதியாக நடைபெற வேண்டும் என்ற காரணத்திற்காக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். விழாவின்போது 50-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் விதிகளை மீறி வந்தனர். அவர்களை போலீசாா ்மறித்து நிறுத்தியபோது சாலை மறியலில் ஈடுபட்டதுடன் அந்த வழியாக பஸ்சில் வந்தவர்களையும் மறியலில் ஈடுபட வைத்தனர். இதனால் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரின் வீடியோ காட்சிகளும் படமாக்கப்பட்டு உள்ளது. அந்த காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிகளை மீறி மேற்கூரையில் வந்தவர்களின் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
விழாவின்போது பிரச்சினைக்குரிய வாசகத்துடன் கோஷமிட்டபடி வந்த விருதுநகரை சேர்ந்த 2 வாலிபர்கள் மீது அங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதேபோன்று விதிமீறல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கமுதி மற்றும் கடலாடி கல்லூரி மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வீடியோ காட்சிகளை கண்காணித்து வருவதாகவும், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என்றும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்தார்.
Related Tags :
Next Story