சொட்டுநீர் பாசனத்திற்கு முறையாக மானியம் கிடைப்பது இல்லை - முறையீட்டு கூட்டத்தில் விவசாயிகள் புகார்


சொட்டுநீர் பாசனத்திற்கு முறையாக மானியம் கிடைப்பது இல்லை - முறையீட்டு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 2 Nov 2019 4:00 AM IST (Updated: 2 Nov 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

சொட்டுநீர் பாசனத்திற்கு முறையாக மானியம் கிடைப்பது இல்லை என்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற முறையீட்டு கூட்டத்தில் விவசாயிகள் புகார் செய்தனர்.

கோவை,

கோவை மாவட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

தமிழ்நாடு விவசாய சங்க கோவை மாவட்ட குழு தலைவர் பழனிசாமி:- தமிழக அரசு சொட்டுநீர் பாசன திட்டத்தின் கீழ் பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதமும், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும் மானியம் வழங்குகிறது. ஆனால் இந்த மானியம் விவசாயிகளுக்கு முறையாக கிடைப்பது இல்லை. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அணுகினால் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி அலைக்கழிக்கின்றனர். எனவே மானியம் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து பேரிடர் மேலாண் மை குழு அமைக்க வேண்டும். விவசாய நிலங்களில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்களின் அடிப்பகுதி துருப்பிடித்து அபாயகரமான நிலையில் உள்ளன. இதை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் வரவு செலவு கணக்குகளை மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்து மாதம், மாதம் அறிக்கை அளிக்க வேண்டும்.

மதசார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த கந்தசாமி:- கோவை மாவட்டம் ராசிபாளையம், அரசூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் மாசடைகிறது. இது குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும். பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த கட்டிடம் பழுதடைந்து மழைநீர் ஒழுகுவதால் இடுபொருட்கள் நாசமாகின்றன. எனவே பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

விவசாயி பெரியசாமி:- பயனற்ற ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் மட்டும் செல்லும் வகையில் இரும்பினால் மூடி அமைக்க வேண்டும். இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம். விவசாயிகள் தாங்கள் விரும்பிய நிறுவனங்களில் சொட்டுநீர் பாசன பொருட்களை வாங்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி பேசும் போது, சொட்டுநீர் பாசனம் திட்டம் தொடர்பாக புகார்களை தீர்க்க பஞ்சாயத்து யூனியன் அளவில் விவசாயிகள் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்திற்காக கோவை மாவட்டத்தில் மொத்தம் ரூ.60 கோடி மானியம் கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதே போல் கூட்டுறவு வங்கிகள் மூலமாக கோவை மாவட்டத்திற்கு ரூ.340 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதில் இதுவரை ரூ.120 கோடி கடனுதவி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Next Story