திருவண்ணாமலையில், ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஆய்வு மேற்கொண்ட அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்தல்


திருவண்ணாமலையில், ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஆய்வு மேற்கொண்ட அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Nov 2019 10:15 PM GMT (Updated: 1 Nov 2019 10:52 PM GMT)

திருவண்ணாமலையில் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆய்வு மேற்கொண்ட அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்தினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ரெயில் நிலையம் வழியாக விழுப்புரம், திருப்பதி, வேலூர், காட்பாடிக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் திருச்சி ரெயில்வே கோட்ட உதவி வணிக மேலாளர் ராஜாசுந்தர், திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்கு வந்திருந்தார்.

அவருடன் இணைந்து சி.என்.அண்ணாத்துரை எம்.பி. ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில் பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் வம்சி, வணிக ஆய்வாளர் அன்பரசன், ரெயில் நிலைய கண்காணிப்பாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றவும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும், தீபத்திருவிழா, பவுர்ணமி நாட்களில் பயணிகளுக்கு சிறப்பு ரெயில் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட அதிகாரிகளிடம் சி.என்.அண்ணாதுரை எம்.பி. வேண்டுகோள் விடுத்தார். மேலும் பயணிகள் நலனுக்காக டிஜிட்டல் போர்டு, சி.சி.டி.வி. கேமரா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குப்பைத்தொட்டி, கழிவறைகள், பயணிகள் தங்குமிடம், ரெயில் நிலைய மேற்கூரையை சீர் செய்து மேம்படுத்திட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பின்னர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு புதிய ரெயில் இயக்கப்பட வேண்டும். புதுச்சேரியிலிருந்து ஹவுராவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவண்ணாமலையில் நிறுத்தப்பட வேண்டும். திண்டிவனம் - திருவண்ணாமலை இடையே புதிய ரெயில் பாதை திட்டம் கைவிடப்படவில்லை. இந்த திட்டத்துக்கு நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு நிதி ஒதுக்கி பணி நடைபெற நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன்.

திருவண்ணாமலையிலிருந்து செங்கம், திருப்பத்தூர் வழியாக ஜோலார்பேட்டை வரை ரெயில்பாதையை இணைக்க வேண்டும். திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரம் உயர்த்தப்பட வேண்டும். தாம்பரம் - விழுப்புரம் ரெயில் விழுப்புரத்தில் இரவில் நிறுத்தப்படுகிறது. சென்னை பீச் - வேலூர் கண்டொன்மன்ட் ரெயில் இரவில் வேலூர் கண்டொன்மன்டில் நிறுத்தப்படுகிறது. இந்த 2 ரெயில்களையும் திருவண்ணாமலை வரை நீடித்து இரவு அல்லது பகலில் இயக்கினால் தொகுதி மக்கள் பயன்பெறுவார்கள்.

கார்த்திகை தீபம், பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும். இதனால் உள்ளூர், வெளியூர் பொதுமக்கள், ஆன்மிகவாதிகள் பெரிதும் பயன்பெறுவார்கள். இந்த கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கனவே ரெயில்வே அமைச்சர், ரெயில் போர்டு தலைவர், தென்னக ரெயில்வே மேலாளரிடம் கோரிக்கையாகவும் வைக்கப்பட்ட தோடு மட்டுமல்லாமல் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பி இது குறித்து விவாதிக்கப்பட்டது.

மீண்டும் வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் இதுகுறித்து வலியுறுத்தப்படும். திருவண்ணாமலையில் நடைபெறும் ரெயில்வே மேம்பாலம் பணியும், தண்டவாளத்திற்கு மேல் உள்ள மேம்பால பணியும் விரைந்து முடித்திட வேண்டும்.

திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட காலதாமதம் ஏற்பட்டால் எனது பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்து தர தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார். 

Next Story