சத்தியமங்கலம் அருகே பரபரப்பு, சிறுத்தை வேட்டையாடிய ஆட்டை ரோட்டில் போட்டு சாலை மறியல்


சத்தியமங்கலம் அருகே பரபரப்பு, சிறுத்தை வேட்டையாடிய ஆட்டை ரோட்டில் போட்டு சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Nov 2019 4:15 AM IST (Updated: 2 Nov 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை வேட்டையாடிய ஆட்டுக்கு உண்டான இழப்பீடு தொகையை வனத்துறையினர் வழங்க கோரி அதன் உடலை ரோட்டில் போட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமம் புதுக்குய்யனூர். இந்த கிராமம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இங்குள்ளவர்கள் பெரும்பாலானோர் விவசாயிகளே. மேலும் கால்நடைகளும் வளர்த்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 40). விவசாயி. மேலும் இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆடுகளை தன் வீட்டின் அருகிலேயே உள்ள கொட்டகையில் கட்டிவிட்டு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது ஒரு ஆட்டை காணவில்லை. உடனே அவர் தன்னுடைய ஆட்டை அங்குள்ள வனப்பகுதிக்கு சென்று தேடினார். அப்போது வனப்பகுதியில் ஒரு இடத்தில் ஆடு கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த ஆட்டை சிறுத்தை வேட்டையாடி கொன்றுவிட்டது என்பதை அவர் உறுதி செய்தார். இந்த தகவல் அந்த பகுதியில் பரவியது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இறந்த ஆட்டின் உடலை தூக்கி கொண்டு சத்தி- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குய்யனூர் பிரிவுக்கு ஒன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஆட்டின் உடலை ரோட்டில் போட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும், சத்தியமங்கலம் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது வனத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் கடந்த 3 மாதங்களாக சிறுத்தை அட்டகாசம் செய்து வருகிறது. இதுவரை 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை கொன்று உள்ளது. இதைத்தொடர்ந்து நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று சிறுத்தை கடந்த 2 வாரத்துக்கு முன்பு கூண்டு வைத்து பிடிக்கப்பட்டதுடன், அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

இந்த நிலையில் சிறுத்தை, மீண்டும் கிராமத்துக்குள் புகுந்து ஆட்டை அடித்து கொன்று உள்ளது. ஏற்கனவே சிறுத்தையால் கொல்லப்பட்ட ஆடுகளுக்கு உண்டான இழப்பீட்டு தொகை வனத்துறையினரால் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி யானைகளும் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள வாழை, கரும்பு போன்ற பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி விட்டு சென்றுவிடுகிறது. பயிர்களுக்கு உண்டான இழப்பீடு தொகையும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. தற்போது சிறுத்தையால் கொல்லப்பட்ட ஆடுகளுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

அதற்கு பதில் அளித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இதுபற்றி உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் 11 மணி அளவில் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சத்தி- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story