நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 2 Nov 2019 4:00 AM IST (Updated: 2 Nov 2019 5:20 AM IST)
t-max-icont-min-icon

நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தென்காசி,

வடகிழக்கு பருவமழையையொட்டி நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 125.70 அடியாக இருந்தது. இது நேற்று காலை 8 மணி நிலவரப்படி 129.40 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 3,543 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 275 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணையில் நேற்று முன்தினம் 140.78 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 145.18 அடியாக உயர்ந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 57.25 அடியாக இருந்தது. நேற்று 59.75 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1,159 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

நெல்லை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை இல்லை. வெயில் கொளுத்தியது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கடந்த 3 நாட்களாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மழை பெய்யாததால் அருவிகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் நேற்று காலை 6 மணி அளவில் பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மெயின் அருவியில் மட்டும் வெள்ளம் குறையாமல் இருந்தது. பின்னர் காலை 10 மணிக்கு மெயின் அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:-

பாபநாசம்-4, சேர்வலாறு-1, மணிமுத்தாறு- 2.4, குண்டாறு- 9, நம்பியாறு-3, அடவிநயினார்- 4, அம்பை- 0.60, சேரன்மாதேவி- 1, நாங்குநேரி 2.50, பாளையங்கோட்டை-1, ராதாபுரம்-7, தென்காசி- 2.20, நெல்லை- 1.

Next Story