கண்ணன்கோட்டை நீர்த்தேக்க திட்டத்தை மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டம் - தலைமை செயலாளர் பேட்டி


கண்ணன்கோட்டை நீர்த்தேக்க திட்டத்தை மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டம் - தலைமை செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 2 Nov 2019 10:30 PM GMT (Updated: 2 Nov 2019 6:33 PM GMT)

கண்ணன்கோட்டை நீர்த்தேக்க திட்டத்தை மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் பேட்டி அளித்தார்.

கும்மிடிப்பூண்டி,

சென்னைக்கு தற்போது பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேற்கண்ட நீர் தேக்கங்களில் இருந்து கிடைக்கப்பெறும் குடிநீர் எல்லா காலங்களிலும் போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை போக்கும் வகையில் சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் 5-வது நீர்த்தேக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த 2012-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதற்காக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவை சேர்ந்த தேர்வாய் கண்டிகை பெரிய ஏரியையும், அருகே உள்ள கண்ணன் கோட்டை ராஜன் ஏரியையும் இணைத்து கூடுதலாக நிலப்பரப்பையும் சேர்த்து ரூ.330 கோடி செலவில் நீர்த்தேக்க திட்டம் வகுக்கப்பட்டது.

இந்த புதிய நீர்தேக்கத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நீரையும், பருவ காலங்களில் பொழியும் மழை நீரையும் சேர்த்து 500 மில்லியன் கனஅடி அளவிற்கு 2 முறையில் மொத்தம் 1,000 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளது.

இத்திட்டத்திற்காக கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி தலைமை செயலகத்தில் இருந்தவாறு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இதற்கான தற்போதைய திருத்திய திட்ட மதிப்பீடு ரூ.380 கோடி அகும்.

இந்த திட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ள பணிகளை நேற்று தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சண்முகம் துறை சார்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை பகுதியில் நீர்த்தேக்க திட்டத்திற்காக ரூ.330 கோடி அனுமதிக்கப்பட்டு அதன் பிறகு நில எடுப்பு காரணமாக சில கூடுதல் செலவீனங்கள் ஏற்பட்டதால் ரூ.380 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டு இருந்தாலும் கூட, இடையில் நில எடுப்பு காரணமாக சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் திட்டத்தை செயல்படுத்துவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டது.

தற்போது அதற்கான பிரச்சினைகள் எல்லாம் முடிக்கப்பட்டு விட்டன. எனவே பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அந்த அடிப்படையில் நேரில் ஆய்வு செய்து உரிய நேரத்தில் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. கிட்டதட்ட 80 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.

மழை காலங்களிலும் தடைபடாத வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே 2020-ம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் இந்த நீர்த்தேக்க பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு கூடுதலாக ஒரு டி.எம்.சி. அளவுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும்.

இந்த நீர்த்தேக்கத்தில் மழை நீர் மற்றும் கூடுதலாக கிடைக்க கூடிய கிருஷ்ணா நீர் ஆகியவற்றின் வாயிலாக நீர் ஆதாரம் கிடைக்கப்பெறும். இங்கு சேமித்து வைக்கப்படும் நீரானது வறட்சி காலத்திலே குடிநீர் பஞ்சம் இல்லாமல் சென்னைக்கு குடிநீர் வழங்கிட வாய்ப்பு ஏற்படும். இதனால் இந்த திட்டமானது அரசுக்கு ஒரு முக்கியமான திட்டம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கே.மணிவாசன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ் பாபு, கொசஸ்தலை ஆறு செயற்பொறியாளர் பழனிசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story