மர்மகாய்ச்சலுக்கு பெண் பலி? பாதாள சாக்கடை குழாய் அடைப்பை சரி செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


மர்மகாய்ச்சலுக்கு பெண் பலி? பாதாள சாக்கடை குழாய் அடைப்பை சரி செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Nov 2019 3:45 AM IST (Updated: 3 Nov 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடை குழாய் அடைப்பினால், கழிவுநீர் வெளியேறியதால் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெண் உயிரிழந்ததாகவும், அதனை சரி செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பாலக்கரை அண்ணா நகரை சேர்ந்த முத்துசாமியின் மனைவி பாப்பாத்தி என்பவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பாப்பாத்தி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்நிலையில் பாலக்கரை அண்ணாநகரை சேர்ந்த பொதுமக்கள் எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ஆளிறங்கு குழியின் வழியாக கழிவுநீர் வெளியேறி வீடுகளை சுற்றி சூழ்ந்திருப்பதாகவும், இதனால் கொசுக்கள் உற்பத்தியானதால் பாப்பாத்தி மர்மகாய்ச்சலால் தான் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக கூறியும், எங்கள் பகுதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு பாதாள சாக்கடை குழாயில் உள்ள அடைப்பை சரி செய்து, சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் பெரம்பலூர்- திருச்சி சாலையில், பாலக்கரையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்களா முன்பு உள்ள சாலையில் நேற்று காலை அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஒருவர் சாலையில் படுத்து நூதன போராட்டத்திலும் ஈடுபட்டார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு கிரிதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பாப்பாத்தி எப்படி இறந்தார்? என்பது அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையை பார்த்தால் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story