ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு: 44 காலிப்பணியிடங்களுக்கு 537 பேர் குவிந்தனர்


ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு: 44 காலிப்பணியிடங்களுக்கு 537 பேர் குவிந்தனர்
x
தினத்தந்தி 3 Nov 2019 4:30 AM IST (Updated: 3 Nov 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. இதில் 44 காலிப்பணியிடங்களுக்கு 537 பேர் குவிந்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் 41 ஆண் ஊர்க்காவல் படையினர், 3 பெண் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 44 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் சேருவதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்த 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் கடந்த 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

இதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 756 விண்ணப்பங்கள் வந்தன. இவர்களுடைய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.

537 பேர் வந்தனர்

அதன்படி நேற்று காலை திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கான ஆட்கள் தேர்வு நடந்தது. தேர்வுக்கு வந்த விண்ணப்பதாரர்களின் உயரம் அளக்கப்பட்டு, அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. ஆயுதப்படை கூடுதல் சூப்பிரண்டு திருவேங்கடம், போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுமலை, வட்டார தளபதி சிராஜூதீன் மற்றும் பலர் கலந்து கொண்டு, ஆட்களை தேர்வு செய்தனர். இந்த பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். 41 ஆண் காலிப்பணியிடங்களுக்கு 502 பேரும், 3 பெண் காலிப்பணியிடங்களுக்கு 35 பேரும் என மொத்தம் 537 பேர் தேர்வுக்கு வந்து இருந்தனர். இதில் தேர்வு செய்யப்படும் 44 பேரும் பயிற்சிக்கு பிறகு பணிக்கு சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

Next Story