சிவம்பட்டி கிராமத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்பு கிராம சபை கூட்டம் கலெக்டர் பங்கேற்பு


சிவம்பட்டி கிராமத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்பு கிராம சபை கூட்டம் கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Nov 2019 4:30 AM IST (Updated: 3 Nov 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

சிவம்பட்டி கிராமத்தில் நடந்த ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் கலந்து கொண்டார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் உள்ள சிவம்பட்டி கிராமத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி பெங்களூரு பவர்கிரீட் இந்தியா நிறுவனம் மற்றும் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்பு கிராம சபை கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். பவர்கிரீட் நிறுவன பொது மேலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசுகையில், அரசு எந்திரம் வெளிப்படை தன்மையுடன் செயல்படும். அதே வேளையில் கோரிக்கைகளை வழங்கும் பொதுமக்களும் சட்ட நெறிகளை கடைபிடித்து கோரிக்கைகளை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் கிராம சபை பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை தேக்கும் வகையில் 100 சிறு பாசன ஏரிகளும், 425 குளம் மற்றும் குட்டைகளும் தூர்வாரப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் இலக்கை எட்டி அனைத்து நீர் தேக்கும் அமைப்புகளும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் பேசினார்.

மேல்நிலை நீர்தேக்க தொட்டி

கிராம சபை கூட்டத்தில் சிவம்பட்டி கிராம மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.10 லட்சம் மதிப்பிலும், தர்மதோப்பு கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச்சுவரும், சிவம்பட்டியில் குடிநீர் பைப்லைன்களும் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தர்மதோப்பு, மாணிக்கம் கொட்டாய், முத்து நகர், நாடார் நகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்துள்ளனர். இவர்களில் தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். தொடர்ந்து அனைவரும் ஊழல் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பர்கூர் தாசில்தார் கோபிநாத், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, தமிழரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, பவர்கிரீட் நிறுவன துணை மேலாளர்கள் சேகர், நந்தகுமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் செந்தில்குமார், முருகன், சக்தி, மனோகரன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பியாரேஜான், கூட்டுறவு சங்க இயக்குனர் பெருமாள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Next Story