மாவட்ட செய்திகள்

மன அழுத்தத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் உளவியல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் + "||" + Schools and colleges must hire psychology doctors to prevent stress

மன அழுத்தத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் உளவியல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்

மன அழுத்தத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் உளவியல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்
மன அழுத்தத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் உளவியல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாணவிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை,

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (ஏ.ஐ.எஸ்.எப்.) மாணவிகள் மாநில மாநாடு கோவையில் நேற்று நடந்தது. முன்னதாக ஊர்வலம் கோவை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இருந்து தொடங்கி டாக்டர் பாலசுந்தரம் சாலை, ஏ.டி.டி.காலனி, வழியாக வ.உ.சி. பூங்கா மைதானம் அருகே நிறைவடைந்தது. ஊர்வலத்தில், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உருவப்படத்தை மாணவிகள் எடுத்து சென்றனர்.


அதைத் தொடர்ந்து காட்டூரில் உள்ள தியாகிகள் நிலையத்தில் மாநாடு நடைபெற்றது. இதில், கேரள மாநில மாணவர் பெருமன்ற துணை செயலாளர் நிமிஷா ராஜு, இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில செயலாளர் மஞ்சுளா, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில தலைவர் குணசேகர் ஆகியோர் பேசினார்கள். மாநாட்டில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் திலிப் குமார் தலைமையில் மேடை நாடகம் நடத்தப்பட்டது. பரத நாட்டியம், சிலம்பாட்டம், பறை இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சிறப்பு நீதிமன்றம்

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவ வழக்கை சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைவாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் கழிவறைகளில் உபயோகித்த நாப்கின்களை அப்புறப்படுத்த போதுமான உபகரணங்கள் இல்லை. எனவே அரசு அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் “நாப்கின் எரியூட்டும் சாதனத்தை“ அமைக்க வேண்டும். இப்போது பல பள்ளிகளில் மாணவிகளையே கழிவறைகளை சுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதில் சாதிய ரீதியான தாக்குதல்களிலும் பள்ளி நிர்வாகம் ஈடுபடுகிறது. இதை தடுக்கும் வகையில் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் தூய்மைப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்.

சிறப்பு வகுப்பு என்ற பெயரில் விடுமுறை நாட்களிலும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் மாணவிகளை பாலியல் ரீதியாக சில ஆசிரியர்கள் மிரட்டுவதாக புகார்கள் வருகின்றன. இதை தடுக்க “ஒரு ஆசிரியை, ஒரு ஆசிரியர்“ வீதம் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு கட்டாயம் வர வேண்டும் என அரசு ஆணைப்பிறப்பிக்க வேண்டும்.

உளவியல் டாக்டர்கள்

இன்றைய சமூக சூழ்நிலை, பள்ளி தேர்வுகள், உடல் சோர்வு ஆகியவை மாணவிகளுக்கு மன அழுத்தம் தரக்கூடியவைகளாக உள்ளன. இதை சரி செய்யும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் உளவியல் டாக்டர்களை அரசு பணி அமர்த்த வேண்டும். ஆய்வு படிப்புகள் மேற்கொள்ளும் மாணவிகளுக்கு அதிகளவில் மறைமுகமாக பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்று வருகிறது. தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை பற்றி வெளியே கூறினால், முனைவர் பட்டம் பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, முனைவர் பட்ட மாணவிகளுக்கென தனிக்குழுக்கள் அமைத்து, இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.