பருவம் தவறிய மழையால் பயிர்சேதம்: விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணம் - முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு


பருவம் தவறிய மழையால் பயிர்சேதம்: விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணம் - முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 10:30 PM GMT (Updated: 2 Nov 2019 9:12 PM GMT)

பயிர்சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்கப்படுவதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.

மும்பை,

மராட்டியத்தில் சில மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தநிலையில், இதுகுறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நேற்று மந்திரி சபை துணைக்குழு கூட்டம் நடந்தது.

இதில், பா.ஜனதா சார்பில் மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், சுபாஷ் தேஷ்முக், அனில் போன்டே, சதபாபு கோட், சுரேஷ் கோதே, மகாதேவ் ஜங்கர் ஆகியோரும், சிவசேனா சார்பில் நீர்வள பாதுகாப்புத்துறை மந்திரியான விஜய் சிவ்தாரே மட்டும் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில், பயிர்சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

முதல்கட்ட ஆய்வில் 325 தாலுகாக்களில் 54 லட்சத்து 22 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களில் சோளம், நெல், பருத்தி மற்றும் சோயாபீன்ஸ் போன்றவை அடங்கும்.

பயிர்சேதத்தை களத்தில் இறங்கி ஆய்வு செய்யவும், வழங்க வேண்டிய நிவாரண உதவிகளை இறுதி செய்யவும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிர்சேத கள ஆய்வு பணியை விரைப்படுத்தி உள்ளோம். அப்போது விவசாயிகள் செல்போனில் புகைப்படமாக எடுத்து கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படும். மத்திய அரசு நிவாரணம் அறிவிக்கும் வரை காத்திருக்காமல், மாநில அரசு தனது கருவூலத்தில் இருந்து விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story