புவனகிரி அருகே வெள்ளாற்றில் தடுப்பணை கட்டுவதற்காக நில அளவீடு பணிகள் தொடக்கம்


புவனகிரி அருகே வெள்ளாற்றில் தடுப்பணை கட்டுவதற்காக நில அளவீடு பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 3 Nov 2019 4:15 AM IST (Updated: 3 Nov 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக நில அளவீடு பணிகள் தொடங்கி உள்ளது.

கடலூர்,

புவனகிரி வழியாக வெள்ளாறு ஓடுகிறது. இந்த வெள்ளாற்றில் கடல் நீர் உட்புகுந்து வருவதால் நிலத்தடி நீர் உப்பாக மாறி வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விளை நிலங்களிலும் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

வெள்ளாற்றில் உப்பு நீர் கலந்து உள்ளதால் சாக்காங்குடி, புவனகிரி, கீரப்பாளையம், ஆதிவராகநல்லூர், பி.முட்லூர், பரங்கிப்பேட்டை உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு ஆதிவராகநல்லூரில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர் நல்ல தண்ணீராக மாறும். மேலும் வெள்ளாற்றில் வரும் தண்ணீரை சேமிப்பதால் நீர் மட்டம் உயர்ந்து விளைநிலங்களிலும் தண்ணீர் பாய்ச்ச ஏதுவாக இருக்கும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

தடுப்பணை

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது. அதன்படி பொதுப்பணித்துறையினர் திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதை ஏற்ற தமிழக அரசு ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் நில ஆர்ஜிதம் செய்ய வேண்டிய பணிகள் இருந்தது.

இதனால் பணிகள் தொய்வு ஏற்பட்டது. சமீபத்தில் இதை பார்வையிட்ட வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி நில ஆர்ஜிதம் செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

நில அளவீடு

இதையடுத்து நேற்று ஆதிவராகநல்லூரில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக நில அளவீடு பணிகள் தொடங்கியது. இந்த பணியில் சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன் மேற்பார்வையில் புவனகிரி தாசில்தார் சத்தியன், 5 நில அளவையர்கள், வருவாய் ஆய்வாளர் இளவரசி, கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் ஆகியோர் ஈடுபட்டனர். இந்த பணிகள் தொடங்கி முடிவடைந்தால் அந்த பகுதி உப்பு நீர் மாறி நல்ல தண்ணீர் கிடைக்கும். மழைநீரையும் சேமிக்க முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story