நெல்லையில் கந்தசஷ்டி விழா: குறுக்குத்துறை-சாலைக்குமார சுவாமி கோவில்களில் சூரசம்ஹாரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


நெல்லையில் கந்தசஷ்டி விழா: குறுக்குத்துறை-சாலைக்குமார சுவாமி கோவில்களில் சூரசம்ஹாரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 2 Nov 2019 10:27 PM GMT (Updated: 2019-11-03T03:57:13+05:30)

நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், நெல்லை சந்திப்பு சாலைக்குமார சுவாமி கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நெல்லை,

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 28-ந்தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை நேரத்தில் சுவாமி வீதி உலா சென்றார். சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலையில் நடைபெற்றது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் உற்சவர், மேலகோவில் என்று அழைக்கப்படுகின்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு நேற்று காலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், ஹோம பூஜையும் நடந்தது. மதியம் 1 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

மாலை 4.10 மணிக்கு சுவாமி மேளதாளம் முழங்க சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து தேரடி திடலுக்கு வந்தார். தெற்குரத வீதி பகுதியில் கஜமுகா சூரனையும், வடக்கு ரதவீதியில் சிங்கமுகா சூரனையும் வதம் செய்தார். தாமிரபரணி ஆற்றின் கரையில் வைத்து சூரபதுமனை சம்ஹாரம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் “கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா“ என்று பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நெல்லை சி.என்.கிராமத்தில் தெய்வானை அம்பாள் தபசு காட்சியும், இரவு 7 மணிக்கு மேலக்கோவிலில் வைத்து சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

நெல்லை சந்திப்பில் உள்ள பாளையஞ்சாலை குமாரசுவாமி கோவிலில் கடந்த 28-ந்தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், யாகசாலை பூஜையும், உள்வீதி சுற்றும் நடந்தது. நேற்று முன்தினம் பார்வதி தேவியிடம் முருப்பெருமான் சக்தி வேல் வாங்கும் வைபவம் நடந்தது.

விழாவின் சிகரநாளான நேற்று காலை 8 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், வேதிகை பூஜை, வேதபாராணயம், கும்ப பூஜை மற்றும் 108 சங்கு பூஜை உள்பட பல்வேறு விசேஷ பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து ருத்திர ஏகாதசி, திரவ்யா குதி, தாரா ஹோமம், சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனை, மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

மாலை 3-30 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. இதைத்தொடர்ந்து மாலை 4-45 மணிக்கு சாலைக்குமாரசுவாமி, பட்டு வண்ண கொடி பிடித்து கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு வந்தார். அவருக்கு முன்பு சூரபத்மன் சென்றார். சாலைக்குமார சுவாமி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் ரோட்டுக்கு வந்தார். அங்கு மாலை 4-52 மணிக்கு கஜமுகா சூரனை சம்ஹாரம் செய்தார்.

இதைத்தொடர்ந்து சுவாமி சிந்துபூந்துறை சிவன் கோவில் அருகே சிங்கமுகா சூரனையும், செல்வி அம்மன் கோவில் அருகே சூரபதுமனையும் வதம் செய்தார். மேகலிங்கபுரத்தில், மாமரமாக உருமாறி நின்ற சூரனை முருகப்பெருமான் வதம் செய்து, அவனை சேவலும், மயிலுமாக ஆட்கொண்டார். அங்கிருந்து மயில் வாகனத்தில் கோவிலுக்கு திரும்பினார். இரவில் தாக சாந்தி அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

இன்று காலை 8 மணிக்கு அம்பாள், தபசு காட்சிக்கு எழுந்தருளுகிறார். மாலை 5 மணிக்கு சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஆறுமுகநயினார் சன்னதியில் இருந்து சுவாமி புறப்பட்டு சுப்பிரமணியர் வடக்கு வாசல் வழியாக வெளியே வந்து, சண்முகர், சுவாமி சன்னதி வழியாக வெளியே வந்து இருவரும் கீழரதவீதி, தெற்கு ரதவீதி சென்று முதல் சூரசம்ஹாரமும், கூலக்கடை பஜார் அருகில் 2-வது சூரசம்ஹாரமும், லாலாசத்திரம் முக்கில் 3-வது சூரசம்ஹாரமும், வடக்கு ரதவீதி அருகில் 4-வது சூரசம்ஹாரமும் நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு ஆறுமுகநயினார் சன்னதியில் வைத்து திருக்கல்யாணம் நடக்கிறது.

பாளையங்கோட்டையில் உள்ள குட்டத்துறை பாலமுருகன் கோவில், மேலவாசல் சுப்பிரமணியசுவாமி கோவில், மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவிலில் உள்ள சண்முகர் உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் நேற்று கந்தசஷ்டி விழா நடந்தது.


Next Story