திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 10:57 PM GMT (Updated: 2 Nov 2019 10:57 PM GMT)

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முருகபவனம்,

திண்டுக்கல் மாவட்டத்தில் மழை, விட்டு விட்டு பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலும், மாலையில் மழையும் பெய்கிறது. இதுபோன்ற தட்பவெப்பநிலை காய்ச்சலை பரப்பும் நோய்க்கிருமிகளை எளிதில் உருவாக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாள்தோறும் இங்கு சுமார் 2,500 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை அதிகரித்து நாள்தோறும் சுமார் 3 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலுக்காக மட்டும் தினமும் சுமார் 500 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) பூங்கோதை கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 13 அரசு மருத்துவமனைகளில் கடந்த மாதத்தில் சுமார் 11 ஆயிரத்து 800 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தன. இதில் 14 பேர் குணமடைந்து விட்டனர் 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான உரிய சிகிச்சை அளிக்கவும், படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story