மின்வாரிய ஊழியர் சாவு: நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல்
மின்வாரிய ஊழியர் சாவுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பழனி,
பழனி அருகே உள்ள தாதநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சீமான் (வயது 53). இவர், நெய்க்காரப்பட்டியில் உள்ள மின்சார வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர், தாதநாயக்கன்பட்டியில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின்சார பழுதை சரிசெய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அவருடைய உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். அப்போது மின்சாரம் பாய்ந்து பலியான சீமானின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி திடீரென பழனி-திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து சீமானின் உறவினர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியலால் திண்டுக்கல் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதற்கிடையே பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் ஆர்.எப்.ரோடு, நகராட்சி சாலை, லட்சுமிபுரம் வழியே திருப்பி விடப்பட்டன. இதனால் ஆர்.எப்.ரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story