திருப்பூர் சூசையாபுரத்தில், வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


திருப்பூர் சூசையாபுரத்தில், வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 Nov 2019 11:47 PM GMT (Updated: 2 Nov 2019 11:47 PM GMT)

திருப்பூர் சூசையாபுரம் மேற்கு பகுதியில் வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்குவதால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் சூசையாபுரம் மேற்கு பகுதியில் சாலையின் அருகே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டிகள் சேதமடைந்து பயன்படாத நிலையில் சாலையின் அருகே சாய்ந்த நிலையில் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையின் அருகே குப்பைகளை கொட்டுகின்றனர். குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சரிவர அகற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குப்பைகள் தேங்கி, பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து கழிவுநீர் கால்வாயில் விழுவதால் கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது.

இதனால் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுவதாக தெரிகிறது. மேலும் வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்குவதால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-

இந்த பகுதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதிக்கு துப்புரவு பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக வருவதில்லை. அதனால் இந்த பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. மேலும் கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளையும் அகற்றுவதில்லை. இதனால் அந்த பகுதியில் கால்வாயில் கழிவுநீர் நிரம்பி காணப்படுகிறது. கழிவுநீர் கால்வாய் செல்லும் பாதையில் புதர்மண்டி கிடப்பதால் கழிவுநீர் செல்வதில்லை. மேலும் மழை பெய்யும் போது கழிவுநீருடன் மழைநீரும் கலந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு புகுந்து விடுகின்றன. அப்போது பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீடுகளில் புகுந்து விடுகின்றன. அதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தபோதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பகுதியில் குழந்தைகள் அதிகமாக காணப்படுவதால் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. தற்போது டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவி வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story