போலீசார் விரட்டியபோது செம்மரம் கடத்திய கார் விபத்தில் சிக்கியது டிரைவர் கைது


போலீசார் விரட்டியபோது செம்மரம் கடத்திய கார் விபத்தில் சிக்கியது டிரைவர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2019 11:00 PM GMT (Updated: 3 Nov 2019 6:01 PM GMT)

போலீசார் விரட்டியபோது செம்மரம் கடத்திய கார் விபத்தில் சிக்கியது. டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் நேற்று காலை காஞ்சீபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிராபகரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் அவர்கள் மடக்கி நிறுத்த முயற்சித்தனர்.

ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இருப்பினும் போலீசார் காரை ஜீப்பில் துரத்திச்சென்று எளாவூரில் உள்ள தொழிற்சாலை அருகே மடக்கி பிடித்தனர். அப்போது அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த மினி லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

போலீஸ் விசாரணையில் ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் இருந்து சென்னைக்கு வந்த காரில் பின் இருக்கை மற்றும் டிக்கியில் மொத்தம் 12 உயர்ரக செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். கார் டிரைவரான செங்குன்றம் இந்திரா நகரை சேர்ந்த சாமுவேல் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

காருடன் பிடிபட்ட செம்மரக்கட்டைகளையும், கைது செய்யப்பட்ட சாமுவேலையும் போலீசார் கும்மிடிப்பூண்டி வனசரகர் மாணிக்கவாசகத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story