தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்


தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 3 Nov 2019 11:00 PM GMT (Updated: 3 Nov 2019 6:13 PM GMT)

தாட்கோ மூலம் ஆதி திராவிடர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் கீழ்கண்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 18 முதல் 65 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சம் ஆகும்.

நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாடு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், கிணறு அமைத்தல் திட்டம், தொழில் முனைவோருக்கான பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டங்கள், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமனை, மருந்துக்கடை, கண் கண்ணாடியகம், முடநீக்க மையம் ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுயஉதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம் திட்ட தொகையில் 50 சத வீதம் ஆகிய திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குனர் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி, இந்திய குடிமை பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்ட பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி1, முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டய கணக்கர் அல்லது செலவு கணக்கர்களுக்கு நிதியுதவி போன்ற திட்டங்களுக்கு http://ap-p-l-i-c-at-i-on.tah-d-co.com என்ற தாட்கோ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தோ அல்லது நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிட சான்றிதழ் எண், சாதி சான்றிதழ் எண், குடும்ப வருமான சான்றிதழ் எண் நேர்காணல் நடத்தப்படும் தேதிக்கு 1½ ஆண்டுகள் முன்பு வரை வருமானச்சான்று பெற்று இருக்கலாம்.

24 மணி நேரமும் பதிவு

பட்டா அல்லது சிட்டா, குடும்ப அட்டை எண், ஆதார் எண், விண்ணப்பதாரரின் தொலைபேசி அல்லது செல்போன் எண், விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரி, திட்டங்களின் விவரங்கள் முதலியவற்றின் ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 1 முதல் 10 வரை உள்ள விவரங்கள் இன்றியமையாதவை. தொலைபேசி அல்லது செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தவிர திட்டங்களுக்கு ஏற்றாற்போல் தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மேலும் விண்ணப்பங்களை மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, காட்டு புதுகுளம், பஞ்சாயத்து யூனியன் அலுவல சாலை, புதுக்கோட்டையிலும் ரூ.60 செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிட இனத்தை சார்ந்தவர்கள் தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பித்து மேற்குறிப்பிட்டு உள்ள பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story