கண்மாயில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, தீக்குளிக்க முயன்ற இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகி கைது


கண்மாயில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, தீக்குளிக்க முயன்ற இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகி கைது
x
தினத்தந்தி 3 Nov 2019 10:15 PM GMT (Updated: 3 Nov 2019 6:58 PM GMT)

காரைக்குடி அருகே கண்மாயில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சங்கு சமுத்திர கண்மாய் உள்ளது. இங்கு கிராவல் மண் அள்ள மாவட்ட நிர்வாகம் தனியாருக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து அங்கு எந்திரங்களுடன் சென்று கிராவல் மண் அள்ளிய போது, அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு எந்திரத்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மண் அள்ள தற்காலிகமாக தடை விதித்தனர்.

சில மாதங்கள் கழித்து மீண்டும் கண்மாயில் மண் அள்ள முயன்ற போதும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பஸ் மறியல் போராட்டம் நடத்தினர். அதில் 10 பேர் மீது குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் கண்மாயில் எந்திரங்கள் மூலம் மண் அள்ள தொடங்கினர். இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க போவதாக கூறினர்.

தகவலறிந்து வந்த போலீசார் அந்த 2 பெண்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த காரைக்குடி நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சீனிவாசன் அந்த பெண்கள் வைத்திருந்த கேனை வாங்கி அதிலிருந்த மண்எண்ணெயை தனது உடல் மீது ஊற்றிக் கொண்டு, மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்தவாறு தீக்குளிக்க முயற்சித்தார்.

இதைப்பார்த்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். அதன் பின்பு போலீசார் சீனிவாசனை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story