அரிச்சல்முனைக்கு, தடையை மீறி சென்ற சுற்றுலா பயணிகள் - எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பிய போலீசார்


அரிச்சல்முனைக்கு, தடையை மீறி சென்ற சுற்றுலா பயணிகள் - எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பிய போலீசார்
x
தினத்தந்தி 3 Nov 2019 10:30 PM GMT (Updated: 3 Nov 2019 6:58 PM GMT)

தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனைக்கு தடையை மீறி ஏராளமான சுற்றுலா வாகனங்கள் சென்றன. போலீசார் சுற்றுலா பயணிகளை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் கடந்த 19-ந்தேதி கடல் கொந்தளிப்பு காரணமாக அரிச்சல்முனை கடற்கரையில் உள்ள சாலை தடுப்பு சுவரின் ஒரு பகுதியும், நடைபாதையும் சேதமடைந்தது. அதைத் தொடர்ந்து அரிச்சல்முனை வரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கம்பிப்பாடு வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சேதமான தடுப்பு சுவர் மற்றும் நடைபாதை சீரமைக்கும் பணிகள் முடிந்து 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் கடல் கொந்தளிப்பு காரணமாக அரிச்சல்முனை வரையிலும் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனுஷ்கோடிக்கு நேற்று காலை கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா வாகனங்கள் தடையை மீறி அரிச்சல் முனை வரையிலும் சென்றன. போலீசார் சாலையின் குறுக்கே வைத்திருந்த கயிற்றால் ஆன தடுப்பையும் அகற்றி விட்டு சுற்றுலா பயணிகளுடன் அரிச்சல்முனை வரையிலும் வாகனங்கள் சென்றன.

இது பற்றி தகவல் அறிந்ததும் அரிச்சல்முனை கடற்கரைக்கு விரைந்து சென்ற கடலோர போலீசார் தடையை மீறி அரிச்சல்முனை வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளையும் கடும் எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியேற்றி கம்பிப்பாடு பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் இறங்கி கடல் அழகை பார்த்து ரசிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த வடக்கு பகுதியில் உள்ள நடைபாதை படிக்கட்டின் அடிப்பகுதியானது கடல் கொந்தளிப்பு மற்றும் மண் அரிப்பால் சேதமடைந்து காட்சியளிக்கிறது.

கடந்த 2 வாரத்திற்கு முன்பு தான் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை சேதமாகி சீரமைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படிக்கட்டுகள் சேதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அரிச்சல்முனை கடற்கரை வரையிலும் சுற்றுலா பயணிகளை மீண்டும் அனுமதிக்கும் முன்பு உடனடியாக அந்த படிக்கட்டுகள் விழாமல் இருக்க சீரமைப்பு பணிகளை செய்ய தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என்ற சுற்றுலா ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story