தொடர் உண்ணாவிரதத்தால் மோசமான உடல்நிலை: நளினி-முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்ற முடிவு
தொடர் உண்ணாவிரதம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் நளினி, முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்தசில நாட்களுக்கு முன்பு முருகன் அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவர் தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். சிறை விதிகளை மீறியதாக அவருக்கான சிறைச் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது.
தன்னை தனி அறையில் அடைத்து சிறைத்துறை அதிகாரிகள் சித்ரவதை செய்வதாக முருகன் குற்றம்சாட்டி உள்ளார். அறையை விட்டு வெளியே விடாமல் 24 மணி நேரமும் அவரை அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முருகன் தன்னை தனி அறையில் இருந்து விடுவிக்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார். நேற்று முன் தினம் அவரை அவரது வக்கீல் புகழேந்தி சந்தித்து பேசினார். அப்போது ஜெயிலுக்குள் நடக்கும் சிறைத்துறை அலுவலர்களின் ஊழலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததன் காரணமாகவே தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என முருகன் வக்கீலிடம் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக நளினியும் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்.
முருகன் நேற்று 17-வது நாளாகவும், நளினி 9-வது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்தனர். தொடர் உண்ணாவிரதத்தால் இருவருக்கும் உடல்நிலையில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முருகன் நேற்று முன்தினம் மயக்கம் போட்டு விழுந்தார். நளினியும் மிகவும் சோர்வாக காணப்படுகிறார்.
அவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று காலையும் டாக்டர்கள் இருவரின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story