நெல்லையில் பலத்த மழை: 3 வீடுகள் இடிந்தன; 6 ஆடுகள் சாவு


நெல்லையில் பலத்த மழை: 3 வீடுகள் இடிந்தன; 6 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 4 Nov 2019 4:30 AM IST (Updated: 4 Nov 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையொட்டி 3 வீடுகள் இடிந்தன. 6 ஆடுகள் பலியானது.

நெல்லை, 

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மழை எதுவும் இல்லாமல் வெயில் அடித்தது. இந்த நிலையில் நெல்லையில் நேற்று அதிகாலை இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

காலை 6 மணி அளவில் தொடங்கிய மழை 8.30 மணி வரை இடைவிடாமல் பெய்தது. இதனால் நெல்லையில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மதியம் மீண்டும் வெயிலின் தாக்கமும், பிற்பகலில் லேசான மழை சாரலும் காணப்பட்டது.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது.

இந்த பலத்த மழையால் பாளையங்கோட்டையில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. பாளையங்கோட்டை ஜோதிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 65). இவருடைய மனைவி சுகுணா (60). நேற்று காலை இவர்கள் இருவரும் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இவர்களது வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக 2 பேரும் தப்பினர்.

இதேபோல் வீரமாணிக்கபுரம் புதுகாலனி 2-வது தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி சிவகாமி (75). பேச்சிமுத்து இறந்து விட்டதால் சிவகாமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மழை பெய்தபோது சிவகாமி வீடும் இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் சிவகாமி வெளியே சென்றிருந்ததால் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பாளையங்கோட்டை, மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி மேலத்தெருவை சேர்ந்தவர் பொன்னையா (82). நேற்று காலையில் சுத்தமல்லி பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது இவரது வீட்டின் சுவர் லேசாக வெடித்தது. இதைக்கண்ட பொன்னையா குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர். அப்போது திடீரென்று வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து வீடு சரிந்தது. இதில் சுவர் அருகில் நின்று கொண்டிருந்த 6 ஆடுகள் இடிபாட்டில் சிக்கி செத்தன.

இதுபற்றி தகவல் அறிந்த பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கி இறந்த ஆடுகளை மீட்டனர். பொன்னையா குடும்பத்தினர் உஷார் அடைந்து வெளியேறியதால் உயிர் தப்பினர். சம்பவ இடத்துக்கு நெல்லை தாலுகா வருவாய் துறை அலுவலர்கள் சென்று விசாரணை நடத்தினர்.

Next Story