எட்டயபுரம், கழுகுமலையில் பலத்த மழை


எட்டயபுரம், கழுகுமலையில் பலத்த மழை
x
தினத்தந்தி 3 Nov 2019 9:45 PM GMT (Updated: 3 Nov 2019 11:52 PM GMT)

எட்டயபுரம், கழுகுமலையில் பலத்த மழை பெய்தது.

தூத்துக்குடி, 

வங்கக்கடலில் உருவான மஹா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் வேகமாக நிரம்பின. தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் 4 கால்வாய்கள் மூலம் தண்ணீர் குளங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மருதூர் மேலக்காலில் 920 கன அடி தண்ணீரும், கீழக்காலில் 400 கனஅடி தண்ணீரும், ஸ்ரீவைகுண்டம் வடகாலில் 506 கனஅடி தண்ணீரும், தென்காலில் 503 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு இருந்தன. இதன் மூலம் தாமிரபரணி வடிநில கோட்டத்தில் உள்ள 53 குளங்களும் விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. ஏற்கனவே 4 நாட்களாக பெய்த மழைக்கு பிறகு கடந்த 2 நாட்கள் நல்ல வெயில் அடித்தது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியது. மதியம் வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மதியம் சிறிது நேரம் வெயில் அடித்தது. மாலையில் மீண்டும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

எட்டயபுரம் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் சாரல் மழை பெய்து வந்தது. மாலை 5 மணி முதல் எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கீழ ஈரால், மேல ஈரால், வாலம்பட்டி, மஞ்சன்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் எட்டயபுரம் ஓடைக்கரை பஜார், மேல வாசல், கீழ வாசல் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அதே நேரத்தில் அப்துல்கலாம் நகர் பகுதி, சண்முகவேல் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். கழுகுமலை பகுதிகளில் காலை 6 மணி முதல் 6.30 வரை பலத்த மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை விளாத்திகுளத்தில் 9.5 மில்லி மீட்டரும், சூரங்குடியில் 2 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 9 மில்லி மீட்டரும், கயத்தாறில் 31 மில்லி மீட்டரும், கடம்பூரில் 22 மில்லி மீட்டரும், எட்டயபுரத்தில் 12 மில்லி மீட்டர் மழையும் பெய்து இருந்தது.

Next Story