கொட்டாம்பட்டி பகுதி கண்மாய்கள் நிரம்புமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


கொட்டாம்பட்டி பகுதி கண்மாய்கள் நிரம்புமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 3 Nov 2019 10:15 PM GMT (Updated: 4 Nov 2019 12:10 AM GMT)

கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்கள் இந்த ஆண்டாவது நிரம்புமா என்ற எதிர்பார்ப்பில் மழைக்காக விவசாயிகள் ஏங்குகிறார்கள்.

கொட்டாம்பட்டி, 

வானம் பார்த்த பூமியான கொட்டாம்பட்டி பகுதியில் தென்னை வளர்ப்பே பிரதான தொழிலாகும். தொடர்ந்து இங்கு மழை பொய்த்து வந்ததால் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே போனது. இதனால் ஒவ்வொரு தோப்பிலும் 5 ஆழ்துளை கிணறு வரை அமைத்து தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனாலும் பலரால் மரங்களை காப்பாற்ற இயலவில்லை.

சிரமப்பட்டு மரங்களை காப்பாற்றிய நிலையில் இந்த ஆண்டு ஓரளவுக்கு மழை கைகொடுத்தது அனைவருக்கும் ஆறுதல் தருவதாக அமைந்தது. இதனால் அங்குள்ள கண்மாய் களுக்கு தண்ணீர் வந்தது. 9 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீரை கண்டாலும் கடுமையான வறட்சி இருந்ததால் தண்ணீர் வற்றிவிட்டது.

இந்த பகுதியிலுள்ள பெரிய கண்மாய்களில் ஒன்றான கொட்டங்குளம் கண்மாய்க்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மழை பெயது பாலாற்றில் வெள்ளம் வந்தால் மட்டுமே கூடுதல் தண்ணீர் வரும். இதே போல கள்ளம்பட்டி சின்னமருது, பெரிய மருது கண்மாய்க்கு பெரியாற்று கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால்தான் தண்ணீர் வரும். ஆனால் அங்கிருந்து தண்ணீர் வராததால் அவை வறண்டு கிடக்கின்றன.

இதேபோல மணப்பெட்டி, கருங்காலக்க்குடி, பள்ளப்பட்டி, வெள்ளினிப்பட்டி, மணல் மேட்டுப்பட்டி, உதினிப்பட்டி, அதிராச்சி கண்மாய் ஆகியவற்றுக்கும் நீர்வரத்து இல்லை. இதனால் பருவமழை தீவிரம் அடைந்து மழை கொட்டித்தீர்க்க வேண்டும் என்று மழைக்காக விவசாயிகள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

போதுமான அளவு மழை இல்லாததால் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு வந்து விடுமோ என்ற அச்சமும் பலரிடையே எழுந்துள்ளது. எனினும் கண்மாய்கள் நிரம்பும் என்ற நம்பிக்கையோடு மழையை எதிர்நோக்கியுள்ளனர்.

Next Story