விவசாய நிலங்களை நாசம் செய்யும் மாடுகள் உரிமையாளருக்கு அபராதம் - கலெக்டர் உத்தரவு
விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் மாடுகளை பிடித்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம்,
மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பேசியபோது, பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மழை பெய்து விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளோம். ஆனால் வயல்வெளிகளில் மாடுகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் நாங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். இந்த மாடுகளை பிடித்து அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்து கலெக்டர் வீரராகவராவ் கூறும்போது, விவசாய நேரங்களில் இதுபோன்று கால்நடைகளால் பாதிப்பு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எனவே உள்ளாட்சி அமைப்பு, காவல்துறை, வருவாய்த்துறை ஆகியோர் இணைந்து மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அந்தந்த கிராம அளவில் குழு அமைத்து மாடுகள் குறித்து தகவல் தெரிவித்தால் மேற்கண்ட துறையினர் கூட்டாக இணைந்து மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
விவசாய நிலங்களை நாசம் செய்யும் மாடுகள் மட்டுமின்றி சாலைகளில் திரிந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் மாடுகளையும் அதன் உரிமையாளர்கள் பிடித்து வைத்து கொள்ள வேண்டும். நிர்வாகத்தின் சார்பில் பிடித்தால் அந்த மாடுகளுக்கு அதிகபட்சம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். யாரும் உரிமை கோராவிட்டால் மாடுகள் ஏலம் விடப்படும். அபராத தொகை சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் கணக்கில் செலுத்தப்படும். இந்த உத்தரவினை அனைத்து ஊராட்சிகளிலும் தண்டோரா மூலம் அறிவித்து மாடுகள் விவசாய நிலங்களையும் நாசம் செய்யாதவாறும், சாலைகளில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தாதவாறும் தடுக்க வேண்டும். மாடுகள் குறித்து கிராம குழவினர் புகார் செய்தால் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய காலமான அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த உத்தரவினை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் கடுமையாக பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story