கூடலூர் அருகே, அரசு பள்ளிக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்


கூடலூர் அருகே, அரசு பள்ளிக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 4 Nov 2019 10:45 PM GMT (Updated: 4 Nov 2019 3:43 PM GMT)

கூடலூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

கூடலூர்,

கூடலூர் வனப்பகுதியில் காட்டுயானைகள் அதிகளவு உள்ளன. பெரும்பாலும் அதன் வழித்தடங்கள் மறிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதோடு, சாலையில் உலா வருகின்றன. மேலும் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்துகின்றன. தொடர்ந்து பொதுமக்களின் வீடுகளையும் இடித்து அட்டகாசம் செய்கின்றன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் ந‌‌ஷ்டத்தை சந்தித்து வருவதுடன் நிம்மதியை இழந்து உள்ளனர்.

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி மூலக்காடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பகுதி அடர்ந்த வனத்தின் கரையோரம் உள்ளது. இங்கு இரவு, பகலாக காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் அந்த பள்ளிக்குள் இரவில் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து, பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்வது வழக்கம். தற்போது அந்த பள்ளியில் 5 மாணவ-மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது நள்ளிரவில் காட்டுயானைகள் பள்ளிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் மணிகண்டனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் விரைந்து வந்து பள்ளியை பார்வையிட்டார். அப்போது வகுப்பறைக்குள் இருந்த மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் சேதமடைந்து கிடந்தன. காட்டுயானைகள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் வனத்துறையினர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

காட்டுயானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தால், நேரில் வந்து அதனை விரட்ட எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கூடத்துக்கு வந்து செல்கின்றனர். மேலும் அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத சூழல் உள்ளது. பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து காட்டுயானைகள் பொருட்களை சேதப்படுத்தி உள்ளதால், பெரும் பணம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோன்று பந்தலூர் தாலுகா சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு-1 பகுதியில் 11 காட்டுயானைகள் தினமும் தொழிலாளர்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு எலியாஸ் கடை பிரிவு பகுதியில் காட்டுயானை ஒன்று சாலையில் வந்து நின்றது. இதனால் அந்த வழியே வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு அய்யன்கொல்லியில் இருந்து கூடலூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை சேரங்கோடு பகுதியில் காட்டுயானை வழிமறித்தது.

இதனால் பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது துதிக்கையை தூக்கியவாறு காட்டுயானை பஸ்சை நோக்கி வேகமாக வந்தது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து டிரைவர் பஸ்சின் என்ஜின் சத்தத்தை அதிகப்படுத்தியவாறு இருந்தார். இதனால் காட்டுயானை வந்த வழியாக திரும்பி சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் (பொறுப்பு) கணேசன் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story