ரஜினிக்கு மத்திய அரசு விருது வழங்கியது குறித்து சீமான் விமர்சிப்பது சரியல்ல - கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி


ரஜினிக்கு மத்திய அரசு விருது வழங்கியது குறித்து சீமான் விமர்சிப்பது சரியல்ல - கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 5 Nov 2019 4:30 AM IST (Updated: 4 Nov 2019 9:24 PM IST)
t-max-icont-min-icon

ரஜினிக்கு மத்திய அரசு விருது வழங்கியது குறித்து சீமான் விமர்சிப்பது சரியல்ல என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

சிவகங்கை,

முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும், நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ. போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதனை சந்தித்து மனு கொடுத்தார். அதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளையான்குடி அருகே ஏற்பட்ட இருதரப்பு மோதல் தொடர்பாக இளையான்குடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் உண்மையான குற்றவாளிகளை பிடிப்பதற்கு பதிலாக போலீசார் இரவு நேரங்களில் வீடுகளுக்கு சென்று அங்குள்ள பெண்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியவர்களிடம் அத்துமீறி பேசி வருகின்றனர் இவைகளை நிறுத்தும்படி தெரிவித்துள்ளோம்.

ரஜினிக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் விருது குறித்து சீமான் விமர்சனம் செய்தது சரியல்ல. இதை அரசியல் ஆக்குவது மிகப்பெரிய தவறு. ரஜினியை பா.ஜனதாக்காரர் எனக்கூறுவதும் தவறு. இவ்வாறு சொல்வதால் தான் கடந்த ஆண்டு தமிழகத்தில் வடசென்னை போன்ற தரமான திரைப்படங்களுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

கடந்த முறை பிரதமர் தமிழகம் வந்த போது சில அமைப்பினர், இயக்குனர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இவர்கள் செய்கிற தவறான செயலால் தரமான, தகுதியானவர்களை இந்திய அளவில் அடையாளம் காட்ட முடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். சீமான் ரஜினி மீது உள்ள தனிப்பட்ட கோபத்தால் இதுபோல் தெரிவித்துள்ளார்.

மதங்கள் மனிதர்களை நல்வழிப்படுத்தவே உருவாக்கப்பட்டது. மனிதன் இன்றைக்கு வர்ணத்தின் அடிப்படையில் இறைவனையே பிரிக்கிறான். இந்தியாவின் பன்முகதன்மைக்கு உலக அரங்கில் மதிப்பிருக்கிறது என்றால், அதற்கு காரணம் மும்மதமும் சேர்ந்தது தான் இந்தியா. இதனால் தான் தேசிய கொடியில் இந்துக்களை குறிக்கும் வகையில் காவிநிறமும், முஸ்லிம்களுக்கு பச்சைநிறமும், கிறிஸ்தவர்களுக்கு வெள்ளைநிறமும் கொண்டு அமைத்துள்ளனர்.

திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இவை எல்லாவற்றையும் அதிகாரிகளும், காவல்துறையும் கண்காணிக்க இயலாது. இந்த தேசத்தில் இன்று தனி மனித ஒழுக்கம் இல்லாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாநில பொருளாளர் இந்திரகுமார் உடனிருந்தார்.

Next Story