பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு - இந்து முன்னணியினர் மனு


பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு - இந்து முன்னணியினர் மனு
x
தினத்தந்தி 4 Nov 2019 10:15 PM GMT (Updated: 2019-11-04T22:01:15+05:30)

கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் நேற்று மனு அளித்தனர்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, புதிய ரேஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

இந்த கூட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா, கோட்ட செயலாளர்கள் சதீஷ், ராஜ்குமார், செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட ஏராளமான இந்து முன்னணியினர் திரண்டு வந்து கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்று அளித்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் பராமரிப்பு, பூஜை ஆகியவற்றிற்காக முன்னோர்களால் சுவாமியின் பெயரில் நிலங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானதாகும். அரசிற்கு சொந்தமானவை அல்ல. சமீபத்தில் தமிழக அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா செய்து கொடுக்கவும், தனியாருக்கு விற்கவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் தற்போது கோர்ட்டில் நடைபெற்று வரும் ஒரு வழக்கிற்காக தாக்கல் செய்யப்பட்டு உள்ள பிரமாண வாக்குமூல பத்திரத்திலும் மேற்கண்டவாறே கூறியுள்ளது. அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே விற்பதற்கும், இலவசமாக வழங்குவதற்கும் எடுத்துள்ள முடிவு பக்தர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே அரசு இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தை திரும்பப் பெறவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பீளமேடு ம.தி.மு.க. பகுதி செயலாளர் எஸ்.பி.வெள்ளியங்கிரி அளித்த மனுவில், பீளமேடு அவினாசி ரோட்டிற்கு அருகாமையில் உள்ள பயனீர் மில் ரோட்டில் ஆரம்ப சுகாதார மையம் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கூலி தொழிலாளர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.

எனவே இவர்களின் நலன் கருதி இங்கு 24 மணி நேரமும் செயல்பட கூடிய புற நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை மற்றும் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை, 24 மணிநேரமும் பிரசவம் பார்க்ககூடிய பிரசவ அறை ஆகியவற்றை செய்து தர வேண்டும். அதேபோல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தருவதோடு, போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும். மேலும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக கட்டியுள்ள 3 ஆயிரம் சதுரடிக்கு மேல் உள்ள புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கோவை மாவட்ட தலைவர் மாணிக்கம், நிர்வாகிகள் லிங்கம், சிதம்பரம் உள்ளிட்டோர் அளித்த மனுவில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டு பாலமுருகன் நகரில் உள்ள சந்தை மற்றும் 45-வது வார்டு ராஜீவ்காந்தி சாலையில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் வாரச்சந்தைகள் நடத்தப்படுகின்றன.

இதனால் அரசுக்கு முறையாக வரி செலுத்தும் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற சந்தைகளால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் பாதிக்கப்படுகிறது. எனவே இதுபோன்ற சந்தைகளை தடை செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் ராவணன் மற்றும் நிர்வாகிகள் உடலில் கொசுவலையை போர்த்தியபடி வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழகத்தில் தற்போது டெங்கு வேகமாக பரவி வருகிறது. பலர் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தரவேண்டும்.

மாநகராட்சி பகுதியில் டெங்கு பரவாமல் தடுப்பதோடு, சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்காத தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story