போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 5 Nov 2019 3:45 AM IST (Updated: 4 Nov 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

புதுக்கோட்டை,

இலங்கையில் உள்ள கிளிநொச்சி மாவட்டம், பரந்தன் பகுதியை சேர்ந்தவர் கவுரிபாலன் என்ற கண்ணன் (வயது 55). இவரை கடந்த 15.7.2015 அன்று ராமநாதபுரம் மாவட்டம், போதைப்பொருள் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஹெராயின் என்ற போதைப்பொருளை கடத்தியதாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1½ கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் பாஸ்போர்ட் இல்லாமல் கள்ளத்தோணியில் இந்தியாவிற்கு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கண்ணன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கண்ணனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1½ கிலோ ஹெராயினின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.3 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் உள்ள அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

10 ஆண்டு சிறை தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், ஹெராயினை கடத்திய குற்றத்திற்காக கண்ணனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவிற்குள் வந்ததற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், மேலும் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் எனவும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 9 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் கண்ணனை மீண்டும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

Next Story