மயானத்துக்கு பாதை கேட்டு மூதாட்டியின் பிணத்தை நடுரோட்டில் வைத்து எரிக்க முயன்றதால் பரபரப்பு


மயானத்துக்கு பாதை கேட்டு மூதாட்டியின் பிணத்தை நடுரோட்டில் வைத்து எரிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Nov 2019 4:30 AM IST (Updated: 5 Nov 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியம் அருகே மயானத்துக்கு பாதை கேட்டு மூதாட்டியின் பிணத்தை நடுரோட்டில் வைத்து எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள எம்.புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி தங்கம்மாள்(வயது 65). இவர் நேற்று இறந்து போனார். அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு நேற்று மாலை எம்.புத்தூர் பகுதியில் உள்ள காவிரி கரை மயானத்திற்கு தகனம் செய்ய எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் மயானத்திற்கு செல்லும் சாலையில் கம்பி வேலி போட்டு பூட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த தங்கம்மாளின் உறவினர்களும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஒன்று சேர்ந்து தொட்டியம்-காட்டுப்புத்தூர் சாலையில் தங்கம்மாளின் பிணத்தை வைத்து, அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் தடுத்து நிறுத்தி திடீரென மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், விறகுகளை நடுரோட்டில் வைத்து பிணத்தை எரிக்க தீ மூட்டினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், தொட்டியம் தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அடைக்கப்பட்ட பாதையை திறந்து விட்டனர்.

இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள், இந்த பாதை பிரச்சினை தொடர்பாக பலமுறை போராட்டம் நடத்தியுள்ளோம். ஒவ்வொரு முறையும் இதேபோல போராடித்தான் தீர்வு காண வேண்டியுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் பாதை வசதி செய்து தர வேண்டும் என்று கூறி சாலை மறியலை கைவிட மறுத்தனர்.

அதன்பிறகு, முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், தொட்டியம் தாசில்தார் பன்னீர்செல்வம் ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக நாளை(புதன்கிழமை) தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று மூதாட்டியின் உடலை எடுத்து சென்று தகனம் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story