திருவள்ளுவரை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது திருச்சியில் சீமான் பேட்டி


திருவள்ளுவரை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது திருச்சியில் சீமான் பேட்டி
x
தினத்தந்தி 5 Nov 2019 4:45 AM IST (Updated: 5 Nov 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளுவரை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீமான் கூறினார்.

திருச்சி,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 19-5-2018 அன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை வரவேற்பதற்காக நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்கும் அதே விமானத்தில் வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை வரவேற்பதற்காக வந்திருந்த ம.தி.மு.க. தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

குற்றப்பத்திரிகை நகல்

ம.தி.மு.க.வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான், அவரது கட்சியின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பிரபு உள்பட 14 பேர் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி 6-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நவம்பர் 4-ந்தேதி கோர்ட்டில் ஆஜர் ஆகும்படி சீமானுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் சம்மன் வழங்கினர்.

இதனையொட்டி சீமான், வக்கீல் பிரபு, கட்சி நிர்வாகிகள் கரிகாலன், அலெக்சாண்டர், இனியன் பிரகாஷ், துரைமுருகன், பர்மா குமார், நாகேந்திரன், மணிகண்டன், ஞானசேகர், சுகேல், சதீஷ்குமார், மதியழகன், கந்தசாமி ஆகிய 14 பேரும் நேற்று திருச்சி கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ஷகிலா முன் ஆஜர் ஆனார்கள். அப்போது அவர்கள் 14 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நகலை பெற்றுக்கொண்டு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இழிவுபடுத்துவதா?

உலக பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து தன் வசப்படுத்திக்கொள்ள சில அமைப்பினர் முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. வள்ளுவ பெருமானை நாங்கள் தெய்வமாக போற்றுகிறோம். அவரை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் சமூகம் மிகவும் பண்பட்ட சமூகம், நாகரிகமான சமூகம் என்பதால் போராட்ட குணம் மங்கி வீதியில் இறங்கி போராட வெட்கப்படுகிறது.

அதே நேரத்தில் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டால் வெகுண்டெழுந்து போராட தயங்காது. திருவள்ளுவரை இழிவுபடுத்தினால் அது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இந்த செயலுக்கு காரணமானவர்களை ஆட்சியாளர்கள் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேவை இல்லாத சிக்கல்

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா திருவள்ளுவர் ஒரு இந்து, திருக்குறள் இந்து மத சனாதன தர்மத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது தான் என கூறி இருப்பதை ஏற்க முடியாது. இந்தியா என்பது வெள்ளைக்காரன் கண்டுபிடித்தது. அது போல் தான் இந்து என்ற சொல்லும். அரசியல் செய்வதற்கு நிலம், வளம் சார்ந்த எத்தனையோ வழிகள் இருக்கிறது. அதனை விட்டுவிட்டு எச். ராஜா தேவை இல்லாத சிக்கல்களை உருவாக்கி தமிழகத்தின் அமைதியை கெடுக்க வேண்டாம் என எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசு டாக்டர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக தான் போராடினார்கள். அவர்களை பணியிடம் மாறுதல் செய்தது தவறு. அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும்.

பாராட்டு

நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு இருப்பதை பாராட்டுகிறேன். அவர்களுக்கு வேண்டியவர் என்பதால் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அவரை விட திரைத்துறையில் 60 ஆண்டுகள் சாதித்த நடிகர் கமல்ஹாசன் இருக்கிறார். அவருக்கு வழங்கப்படவில்லை. பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து போன்றோர்கள் அவரவர்கள் துறையில் சாதித்து இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story