ஜவுளி பூங்கா திட்டத்திற்கு ஆயத்த பணிகள் மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்


ஜவுளி பூங்கா திட்டத்திற்கு ஆயத்த பணிகள் மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 4 Nov 2019 11:00 PM GMT (Updated: 4 Nov 2019 6:57 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட ஜவுளி பூங்கா திட்டத்திற்கு ஆயத்த பணிகள் மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர்- இரூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 100 ஏக்கர் நிலத்தில், பெரம்பலூர் மாவட்ட ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த ஜவுளி பூங்கா திட்டம் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த கோரி பாடாலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட இளைஞரணி பொருளாளருமான வேல்முருகன் தலைமையில், இரூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட இளைஞரணி தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில், சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள இரூர் பிரிவு சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை திடீரென்று நேற்று காலை தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் உண்ணாவிரதத்தில் அனுமதி வாங்காததால் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத இடத்தில் வைத்து கொள்ளுங்கள் என்று கூறியதை தொடர்ந்து, அவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஜவுளி பூங்காவிற்கு செல்லும் சாலையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

நிர்வாகம் முட்டுக்கட்டை

அப்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பாடாலூர் மற்றும் இரூர் ஊராட்சிக்கு உள்பட்ட 100 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), கைத்தறி மற்றும் துணிநூல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்துக்கு கட்டமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இந்த திட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் முட்டுக்கட்டையாக உள்ளது.

இது தொடர்பாக நாங்கள் கடந்த ஆண்டு குன்னம், பெரம்பலூர் எம்.எல்.ஏ.க்களிடம் கொடுத்த புகாரின் பேரில், அவர்களும் தொழில்துறை அமைச்சரிடம் ஜவுளி பூங்காவை செயல்படுத்த கோரிக்கை வைத்தனர். அதன்பேரிலும் அமைச்சரும் பெரம்பலூர் மாவட்ட ஜவுளி பூங்கா செயல்படுத்துவதற்காக ஆயுத்த வேலைகளை முடுக்கி விடுமாறு கலெக்டரிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் ஒரு ஆண்டுக்குள் மேலாகியும் ஜவுளி பூங்கா செயல்படுத்துவதற்கான எந்தவித ஆயத்த வேலைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டதாக தெரியவில்லை.

பேச்சுவார்த்தை

இதனால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நிர்வாகத்தை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். எனவே மத்திய அரசு அல்லாமல் மாநில அரசால் முதன் முதலாக அறிவிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த பெரம்பலூர் மாவட்ட ஜவுளி தொழில்நுட்ப பூங்கா திட்டத்தை விரைந்து செயல்படுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டு, அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story