சிதம்பரத்தில் இளம்பெண் தற்கொலை: கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
சிதம்பரத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் மந்தகரை காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபிராமி(வயது 22). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் நேற்று முன்தினம் மனமுடைந்த அபிராமி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அபிராமியின் உறவினர்கள் நேற்று காலையில் மந்தக்கரை சாலையில் ஒன்று திரண்டனர். அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அபிராமி தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, விசாரித்து கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோஷமி்ட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இது தொடர்பாக சப்-கலெக்டரிடம் மனு கொடுக்குமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அபிராமியின் தந்தை முருகதாஸ், சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜனிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது 2-வது மகள் அபிராமியை, எனது தங்கை மகன் வினோத் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டார். இதனால் வினோத் குடும்பத்திற்கும், எங்களது குடும்பத்திற்கும் பிரச்சினை இருந்து வந்தது. மேலும் அடிக்கடி வினோத்தின் தாயார் சுமதி மற்றும் அவரது சகோதரிகள் வரதட்சணை கேட்டு எனது மகளை துன்புறுத்தினார்கள். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் தற்போது எனது மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்கள். எனது மகளை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக அறிகிறோம். எனது மகளை கொலை செய்து விட்டு, உடலை தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுகிறார்கள். இந்த கொலையை மறைக்க பார்க்கிறார்கள். எனவே தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, உரிய விசாரணை நடத்தி, கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story