எடியூரப்பா பேசிய ஆடியோவை பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் வெளியிட்டிருக்க வேண்டும் ; சித்தராமையா பேட்டி


எடியூரப்பா பேசிய ஆடியோவை பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் வெளியிட்டிருக்க வேண்டும்  ; சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 5 Nov 2019 5:00 AM IST (Updated: 5 Nov 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

எடியூரப்பா பேசிய ஆடியோவை பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் வெளியிட்டிருக்க வேண்டும் என்று சித்தராமையா கூறினார். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெலகாவி, 

கர்நாடகத்தில் காங்கிரஸ் திவாலாகிவிட்டதாக மந்திரி பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். திவாலாகி இருப்பது காங்கிரஸ் அல்ல. பா.ஜனதா தான் திவாலாகிவிட்டது. உண்மையை சொன்னால், பா.ஜனதாவினர் வெறுப்பை கக்குகிறார்கள். எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியானது. அதில் தனது கருத்துகள் திரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். இந்த விஷயத்தில் அவர் காங்கிரசையும், என்னையும விமர்சிக்கிறார்.

பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பாவின் பேச்சை பதிவு செய்தது யார்?. பா.ஜனதாவினர் தான் அதை பதிவு செய்தனர். பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் அல்லது துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி அல்லது மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோரில் ஒருவர் தான் எடியூரப்பாவின் பேச்சை பதிவு செய்து வெளியிட்டிருக்க வேண்டும்.

இந்த ஆடியோ குறித்து முதலில் பேசிய எடியூரப்பா, தான் பேசியது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டார். அவரது கட்சி மேலிட தலைவர்கள் திட்டிய பிறகு, இப்போது அவர் பேச்சை மாற்றி பேசுகிறார். எடியூரப்பாவின் ஆடியோவை சுப்ரீம் கோர்ட்டில் இன்று (அதாவது நேற்று) தாக்கல் செய்துள்ளோம். அறிக்கை கேட்டுள்ளனர். அதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

நான் மோசமான அரசியல் செய்வதாக ஷோபா எம்.பி. கூறியுள்ளார். அவரது நாக்கு நீளமானது. கட்டுப்பாட்டுடன் பேசுவது நல்லது. எனது 40 ஆண்டுகால அரசியலில் நான் நேரடி அரசியலை தான் செய்துள்ளேன். இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story